Breaking News

விழுது மற்றும் ஐடோ இளைஞர்களின் புத்தளம் மாவட்ட கலாச்சார நிகழ்வு

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

விழுது நிறுவனத்தின் மேற்பார்வையில் புத்தளம் மாவட்ட ஐடோ இளைஞர்களின் ஏற்பாட்டில் ஜீ.ஐ.இஸட் அமைப்பின் நிதி உதவியின் கீழ் நடாத்தப்பட்ட கலாச்சார நிகழ்வு புத்தளம் வேப்பமடு முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


"ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினரை ஒன்றிணைக்கும்  எங்கள் குரல்" எனும் கருப்பொருளில் மக்களிடையே  கலாச்சார, சமய ரீதியிலான முரண்பாடுகளைக் களைந்து சமயங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நான்கு மத சமயத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் ஜஹத் புஷ்பகுமார, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவகலத்தின் பிரஜா பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் ரவீந்தர சமரவீர, மணல்தீவு கிராம உத்தியோகத்தர் முஹம்மது அர்ஷாத், கரைத்தீவு வடக்கு கிராம உத்தியோகத்தர் பாத்திமா சப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எச்.எம். ஹமாஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெஸீம் உட்பட புத்தளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் புத்தளம்  மணல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.


இதன்போது, அரச சேவையினைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆலோசனைகள், ஒன்றிணைந்த கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.


அது மாத்திரமன்றி, பொலிஸ் - பொதுமக்கள் இடையில் காணப்படும் நல்லுறவு , பொலிஸாரின் செயற்பாடுகள் பற்றி மக்களிடையே காணப்படும் பிரச்சினை, குடும்ப ஒற்றுமை தொடர்பிலும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவகலத்தின் பிரஜா பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் ரவீந்தர சமரவீர தெளிவுபடுத்தினார்.


அத்துடன், பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் புத்தளம் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் ஜஹத் புஷ்பகுமாரவினால் விளக்கமளிக்கப்பட்டது அத்துடன் , பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.


பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் , அதற்கான விண்ணப்பம் படிவங்களும் புத்தளம் பிரதேச செயலகத்தினால் இதன்போது விநியோகிக்கப்பட்டன.


இன ஒற்றுமையையும் சமய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் குறித்த அமைப்பினர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments