புத்தளத்தில் குதீஸ் தின அனுஷ்டிப்பும் பாலஸ்தீன் மக்களுக்கான துஆ பிரார்த்தனையும்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் சர்வமத அமைப்பு, புத்தளம் பெரியபள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் நகரக்கிளை என்பன சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீனியர்களுக்கான சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ( 28) புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் பலஸ்தீன் தொடர்பான ஜூம்ஆ பிரசாங்கத்தைத் தொடர்ந்து பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரமும் சேர்த்துக்கொள்ளப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளது.
கொவிட் தொற்று காலப்பகுதியில் மரணித்த இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை சர்வதேச விதிமுறைகளையும் மீறி எரித்ததனால் முஸ்லிம் சமூகத்தின் உரிமை பாதிக்கப்பட்டமை தொடர்பில் அதற்கான நீதி கோரி இன்று வரை குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது வரையில் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் , சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்குமான கவன ஈர்ப்பின் அவசியம் உணரப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிவில் சமூகத்தினராலும் உரிமைச் செயற்பாட்டாளர்களாலும் பிரதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடைபெற்று வருகின்றது .
அத்தோடு இம்முறை இடம்பெறவிருக்கும் புத்தளம் ஸாஹிறா மைதான நோன்புப் பெருநாள் குத்பாவைத் தொடர்ந்து, ஜனாஸா எரிப்பினால் பாதிப்படைந்த முஸ்லிம் சமூகத்தின் மனத்துயரங்களை எமது பிரதேசத்தில் பணியாற்றும் பல்வேறு தலைமைகளுக்கும் எத்திவைத்து அதனூடாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments