மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்.
எம்.யூ.எம். சனூன், எம். எச். எம். சியாஜ்.
மதுரங்குளி மீடியாவின் ஏற்பாட்டில் கடந்த ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும் , புலமையாளர்கள் மற்றும் ஆளுமைகள் கௌரவிப்பும் வெள்ளிக்கிழமை (28) மாலை மதுரங்குளி ட்ரீம் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் என்.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார். முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைசர் மரைக்காரின் அழைப்பின் பேரிலேயே ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதிதிகளாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹீர், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவரும், கடையாமோட்டை ஜாமிஉல் உமர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவருமான ஏ.எச். எம்.ஹாரூன், புத்தளம் தூய தேச கட்சியின் தலைவர் இஷாம் மரைக்கார் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கடந்த ரமழான் மாதத்தில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற போட்டியாளர்களில் இருந்து பிரதம அதிதியினால் வெற்றியாளர்கள் வெளிப்படைத் தன்மையுடன் மேடையில் வைத்து தெரிவு செய்யப்பட்டு அவரின் கரங்களாலேயே பணப்பரிசில்கள் வழங்கி வைத்ததும் சிறப்பம்சமாகும்.
முதலாம் இடம் பெற்ற அதிஷ்டசாலிக்கு 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், இரண்டாம் இடம் பெற்ற அதிஷ்டசாலிக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், மூன்றாம் இடம் பெற்ற அதிஷ்டசாலிக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டதோடு, அதிஷ்டசாலிகள் பத்து பேருக்கு தலா 05 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு 2023, 2024 ஆண்டுகளில் தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பதக்கம் அணிவித்து, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விஷேட கௌரவிப்பாக ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர்களான என்.எம்.எம். நஜீப், எம்.எச்.எம். றாசிக், ஏ. சீ. நஜிமுதீன் ஆகியோருடன் புத்தளம் சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூகசேவையாளருமான எம்.யூ.எம். சனூன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கூடவே ஊடகவியலாளர் எம்.எச்.எம்.சியாஜும் இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மதுரங்குளி மீடியாவின் நிறைவேற்று பணிப்பாளர் முஹம்மது ரிஸானின் வழிகாட்டலில் புத்தளம் மதுரங்குளியிலிருந்து கடந்த 08 வருடங்களாக இணையத்தளம் ஊடாக தமிழ் பேசும் சமூகத்தின் குரலாக சமூக மாற்றத்தை நோக்கிய ஊடக பயணத்தை மேற்கொண்டு வரும் மதுரங்குளி மீடியா நிறுவனமானது கல்வியியலாளர்களோடு இரு ஊடகவியலாளர்களையும் கௌரவித்து மகிழ்வித்துள்ளது.
அந்த வகையில் புத்தளத்தில் கடந்த 43 வருடங்களாக பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாளராகவும், சமூக சேவையாளராகவும் மக்கள் பணி செய்து வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாதினீ எம்.யூ.எம். சனூன் மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களாக பல்வேறு பத்திரிகைகளிலும் செய்தியாளராகவும், கற்பிட்டியிலிருந்து வெளிவந்த முதல் பத்திரிகையான அரவம் பத்திரிகையின் ஆசிரியர் பீட உறுப்பினராகவும், கற்பிட்டியின் முதலாவது மின்னிதழ் பத்திரிகையான கருப்பு வெள்ளையின் பிரதம ஆசிரியராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வரும் ஸ்ரீ விக்ரமகீர்த்தி எம்.எச்.எம். சியாஜ் ஆகிய இருவரையும் பாராட்டி கௌரவித்துள்ளது.
No comments