NPP அரசாங்கத்தின் பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு என்ன நன்மை உள்ளது ?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு சமூக வலைத்தளங்களில் அதனை பலர் புகழ்கின்றனர். அதிலும் கூடுதலாக சிறுபான்மை சமூகத்திலிருந்து தமிழர்களைவிட முஸ்லிம்களே மிகவும் அதிகமாக புகழ் பாடுகின்றனர். இது அவர்களது அரசியல் அறிவை மதிப்பிடுகின்றது.
இது ஒரு இடதுசாரி கொள்கையுடைய அரசாங்கம் என்பதனால் அவர்களது கொள்கைக்கு ஏற்றால்போல் பட்ஜெட் தயாரிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விடயமல்ல. இருந்தாலும் அவர்கள் எதிர்கட்சியில் இருந்தபோது ஆர்ப்பாட்டம் செய்து எதிர்த்தவைகளை தற்போது ஆதரிப்பதுதான் ஆச்சர்யம்.
இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களைவிட சுமார் 75 வீதம் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்கள் மிகவும் வறுமையான நிலையிலும், பின்தங்கிய குக்கிராமங்களிலும் வாழ்கின்றார்கள்.
அவ்வாறான மக்களை அடிப்படையாகக்கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டதனால் முஸ்லிம்களும் அதில் நனையக்கூடும். ஆனால் இந்த பட்ஜட்டானது ஏதோ முஸ்லிம் மக்களின் நன்மை கருதி தாயாரிக்கப்பட்டது போன்று நாங்கள் ஆர்வக்கோளாறு காரணமாக துள்ளிக்குதிப்பதில் பயனில்லை.
இனவாதமில்லாத ஆட்சி என்று கூறிக்கொண்டு அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம் வழங்காமை உட்பட ஏராளமான விடயங்களில் இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களை புறக்கணித்து வருகின்ற நிலையிலும், முஸ்லிம் தனியார் சட்டங்களில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்று ஆளும் தரப்பிலிருந்து குரல் கொடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்திலும், சிங்கள மக்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை சமூக வலைத்தளங்கள் மூலமாக நாங்கள் பூசி மெழுக முற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
அவ்வாறு முஸ்லிம்கள் திருப்தியடைவதென்றால், அமைச்சரவையிலும், அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள் பதவிகளுக்கு முஸ்லிம்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப பதவிகள் வழங்கப்படல் வேண்டும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள், புனிதபூமி என்ற போர்வையில் கைப்பற்றப்பட்ட நிலங்கள், சிலாவத்துறையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் முஸ்லிம்களின் காணிகளில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் ஆகியவற்றை விடுவித்தால் முஸ்லிம்களாகிய எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், ஆட்சியாளர்கள் அவர்களது சமூகத்திற்காக தயாரித்த இந்த பட்ஜெட்டுக்காக நாங்கள் புகழ்பாடுவதானது தாங்கள் சார்ந்த NPP கட்சியின் செல்வாக்கில் பாதிப்பு ஏற்படாது கட்சியை வளர்க்கும் நோக்கமே தவிர, இதனால் முஸ்லிம்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. அத்துடன் நாடு என்ற கவர்ச்சியான வார்த்தைக்குள் சிறுபான்மையினராகிய நாங்கள் புதைந்துவிட முடியாது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments