Breaking News

கல்முனை சாஹிரா கல்லூரி சமூகத்தால் ஆதம்பாவா எம்.பி.க்கு மகத்தான கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், அங்கு கற்பித்த ஆசிரியருமான தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும்  அபூபக்கர் ஆதம்பாவாவை பாராட்டிக் கௌரவித்து, முடி சூட்டிய பெரு விழா கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில்  இடம்பெற்றது.


வெளிச்சத்தில் மரபு: வகுப்பறையில் இருந்து பாராளுமன்றம் வரை எனும் தொனிப்பொருளில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிபர் உட்பட பிரதி அதிபர்கள், கல்வி சார், சாரா ஊழியர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவுக்கு முடி சூடி, பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்.


இந்நிகழ்வில், பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் தங்களுக்கு இருக்கின்ற கலைத்திறமைகளினூடாக, பாராளுமன்ற உறுப்பினர் உட்பட வருகை தந்த அதிதிகளை மகிழ்ச்சிப்பரவசத்தில் திகழச் செய்தனர்.


நிகழ்வில் தலைமை வகித்து பேசிய பாடசாலையின் அதிபர் எம். ஐ.ஜாபீர், பாராளுமன்ற உறுப்பினரின் கடந்த கால சுவாரஸ்யமான பழைய நினைவுகளை மீட்டி பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை நகைச்சுவை ததும்பக் கூறி சபையோரையும் மகிழ்ச்சி ப்படுத்தினார்.


அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, தான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களோடு,  மாணவர்களுக்கு கற்பித்த நேரங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும் நினைவுபடுத்திப் பேசினார். அத்துடன் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை எனது தாய் பாடசாலை எனவும் இப் பாடசாலையில் இருக்கின்ற குறைகளை நன்கு அவதானித்திருக்கிறேன். அவற்றுள் தன்னால் எந்தளவு செய்ய முடியுமோ அந்தளவு நிவர்த்தி செய்து தருவதாகக் குறிப்பிட்டார். 


இராப்போசன விருந்துடன் நிறைவு பெற்ற இந்நிகழ்வை றிபாய் ஆசிரியர் தொகுத்து வழங்கினார்.















No comments