Breaking News

புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்துக்கும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்.

எம்.யூ.எம்.சனூன்

வடமேற்கு – வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் ஏற்பாட்டில், புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்துக்கும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் (31) பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.


புத்தளம் நகரின் வர்த்தகர்களின் நலன்கள் மற்றும் பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளுடன் தொடர்பு படும் சுத்தம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய தலைப்புக்களில் தொகுக்கப்பட்ட 12 விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், புத்தளம் நகர சபை செயலாளர் எல்.ஜி.பி. பிரீத்திக்கா, இலங்கை கடற்படை புத்தளம் முகாம் கட்டளை அதிகாரி கெப்டன் குமார, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஹேஸ் பண்டார, புத்தளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எச்.பி.என். குலதுங்க, இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் மஹிந்த அரன்பத், பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.ஜே. அருள்தாஸ் ஆகிய அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


இதன்போது, புத்தளம் நகரின் கடைத்தெரு பகுதியில் சுத்தம், பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


மேலும், மக்களின் அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக மேற்கொள்ளக் கூடிய வகையில் புத்தளத்தை ‘ரம்மியமான நகரமாக’ (Pleasant City) தரம் மேம்படுத்தல் குறித்தும் கவனம் எடுக்கப்பட்டன.


புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களுக்கு புத்தளம் பொலிஸ் திணைக்களத்தின் அனுமதியுடனான அடையாள அட்டைகளும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.








No comments

note