அமெரிக்காவின் உளவியல் அச்சுறுத்தலும், இன்னுமொரு வியட்நாமும் ?
உலகின் முதன்மை பயங்கரவாத தலைவர்களின் தீர்மானங்கள் காசா மக்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என்பது முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதான். ராட்சத குண்டுகள் மற்றும் நவீன ஆயுதங்கள் மூலம் கைப்பற்ற முடியாத காசா நிலத்தினை ட்ரம்ப் என்ற புதிய அவதாரத்தினை காண்பித்து சுவீகரிக்க திட்டமிட்டனர்.
மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பாலஸ்தீனிய மக்கள் இருக்கும் வரைக்கும் அங்கு யூதர்களுக்கு நின்மதி இல்லை என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டதனால் அச்சுறுத்தலாக இருக்கின்ற பாலஸ்தீனர்களை தந்திரமாக வெளியேற்ற திட்டமிட்டனர்.
ஆனாலும் இரு பயங்கரவாத தலைவர்களின் அறிக்கை வெளியானதன் பின்பு சர்வதேச ரீதியில் அமெரிக்காவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பியதனால் ட்ரம்பின் அறிக்கையினை விலக்கிக்கொள்வதாக வெள்ளைமாளிகை அறிக்கை கூறுகின்றது. ஆனாலும் காசா மக்களை வெளியேற்றும் திட்டம் வகுக்கப்படுவதாக இஸ்ரேலிய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றது.
டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனான ஜெரால்ட் ஒரு யூதர். இஸ்ரேல் நாட்டுக்கு நிதி வழங்குகின்றவர்களில் இவர் பிரதானமானவர். மருமகனின் அழுத்தம் காரணமாகவே கடந்த ஆட்சியில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததுடன், அமெரிக்க தூதரகத்தை டெல்லவிவிலிருந்து ஜெருசலத்துக்கு இடம் மாற்றியதாக அப்போது தகவல் வெளியானது.
இரண்டாவது தடவையாக ஆட்சிக்கு வரமுன்பு காசாவை நரகமாக்குவேன் என்று அறிவித்துவிட்டு, பதவிக்கு வந்த உடனேயே இஸ்ரேலுக்கு ராட்சத குண்டுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கினார். இது ஓர் உளவியல் அச்சுறுத்தலாகும். அதாவது உளவியல் அச்சுறுத்தல் மூலம் காசா மக்களை வெளியேற்றும் சதித்திட்டமாகும்.
ஒன்னரை வருடகால யுத்தத்தில் ஐம்பதுநாயிரம் உயிர்களை இழந்தும், ஒன்னரை இலட்சம் பேர்கள் காயமடைந்தும், பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை இழந்தும், துயரங்களையும், பிரிவுகளையும், வலிகளையும், அவலங்களையும் எதிர்கொண்ட அம்மக்களுக்கு இனிமேல் இழப்பதற்கு எதுவுமில்லை.
அமெரிக்க ஜனாதிபதி கூறுவது போன்று நின்மதியான வாழ்க்கையினை வாழ்வதற்கு காசா மக்கள் ஆசைப்பட்டிருந்தால், அவர்கள் இவ்வளவு துயரங்களையும், வலிகளையும் சுமந்துகொண்டு காசாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எப்போது உள்ளாசனமான வாழ்க்கையினை நோக்கி சென்றிருப்பார்கள்.
போர் ஆரம்பித்ததிலிருந்து பல்லாயிரக்கணக்கான யூதர்கள் நாட்டைவிட்டு சென்றுள்ளனர். இத்தனைக்கும் பாலஸ்தீன் போராளிகள் மக்களை நோக்கி தாக்கியதில்லை. ஆனால் யூத பயங்கரவாதிகளினால் அப்பாவி மக்கள்மீது கொத்துக்கொத்தாக குண்டுகளை வீசி கொலை செய்த நிலையிலும் அம்மக்கள் தங்களது நாட்டைவிட்டு செல்லவில்லை.
வியட்நாமில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க படைகளுக்கு எதிராக வியட்கொங் போராளிகள் சுரங்கம் அமைத்து கொரில்லா தாக்குதல்கள் மூலம் அமெரிக்க படைகளை விரட்டியடித்தனர். அதுபோல் காசாவில் சுரங்கம் அமைத்து போராடிவருகின்ற ஹமாஸ் போராளிகளை அழிப்பதற்கு அமெரிக்க படைகள் களமிறங்கினால் அங்கு இன்னுமொரு வியட்நாம் காத்துக்கொண்டிருக்கின்றது என்பது அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை.
எனவேதான் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அமெரிக்கா தனது அறிவிப்பில் பின்வாங்கினாலும், காசா மக்களை வெளியேற்றும் சதித்திட்டத்தை இஸ்ரேல் அரங்கேற்றலாம். அவ்வாறு செய்கின்றபோது அமெரிக்கா அதற்கு மறைமுக ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments