Breaking News

வடமேல் மாகாண புலமை பரிசில் பரிட்சை பெறுபேறு - 2024 (தமிழ்ப்பிரிவு)- கவனக்குவிப்பை வேண்டி நிற்கும் தரப்பு…!!!

எஸ்.ஏ.எம்.றிஸ்வி  (Med, SLEAS)

 பாடசாலைக் கல்விக் கட்டமைப்பில் முகங்கொடுக்கும் பொதுப் பரிட்சைகளில் ஒரு முக்கிய பரிட்சையாக புலமை பரிசில் பரிட்சை அடையாளப்படுத்தப்படுகிறது.  மாணவர்களுக்கு  பிரபல பாடசாலை அனுமதி, வசதியற்ற மாணவர்களுக்கு உதவி பணத்தைப் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றினை நோக்காகக்கொண்டு இப்பரிட்சை நடாத்தப்படுகிறது. 


பரிட்சையில்  இரண்டு வினாப்பத்திரங்களிலும் சராசரியாக 35 புள்ளிகளைப் பெற்று மொத்தமாக 70 புள்ளிகளைப் பெறுபவர் பரிட்சையில் சித்தியடைந்தவராக கருதப்படுவதுடன், குறித்த மாணவர்களுக்கு கல்வியமைச்சின் பாடசாலை செயற்பாட்டுக் கிளையினால் அடைவுகளுக்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. 70 புள்ளி என்பது ஆரம்ப பிரிவில் ஒரு மாணவர் அடைந்திருக்க வேண்டிய அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகளை அளவிடுவதற்கான ஒரு இறுதி மதிப்பீடாகவும் கருதப்படுவது இதன் மற்றுமொரு விசேட அம்சமாகும்.


2024 பெறுபேறுகளின் பிரகாரம் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி நிலையின் தரப்படுத்தலின் பிரகாரம் சப்ரகமுவ மாகாணம், தென் மாகாணம் என்பன முதலாம் இரண்டாம் நிலையிலும், வடமேல் மாகாணம் மூன்றாம் இடத்தினையும் தக்கவைத்துக்கொண்டது. வடமேல் மாகாணத்தில் தோற்றிய மொத்த மாணவர்கள் தொகை 39,381 ஆகும். வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 7004 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் 31,423 (79.79%%) பெற்றுக்கொண்டனர் மாவட்ட ரீதியில் நோக்குகையில் கடந்த 2023, 2024. ஆகிய இரண்டு வருடங்களிலும் குருணாகல் மாவட்டமே தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது. குருணாகல் மாவட்டத்தில் பரிட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்கள் 26,589  இதில் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர்கள்  22,402 (84.25%) ஆவார். 



அதேவேளை 2024 ஆம் ஆண்டு புத்தள மாவட்டத்திலிருந்து தோற்றிய மொத்த மாணவர்கள்  12,792 ஆகவும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் 9021 (70.52%) ஆகும்.  மாவட்ட ரீதியான தரப்படுத்தலில் புத்தள மாவட்டம் 2023 இல் 19  ஆம் இடத்தினையும 2024 இல் 22 ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.  


அவ்வாறே மொழி ரீதியாக நோக்குகையில் குருணாகல் மாவட்டத்தில் சிங்கள மொழியில் தோற்றிய மாணவர்கள் 23,976 இதில் 70 புள்ளிகளுக்கு மேல் 22,070 (92.05%) பெற்றுக்கொண்டமை அவதானத்துக்குரியது.  அவ்வாறே வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 5134 (21.41%)பெற்றுக்கொண்டனர்.  புத்தளம் மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் 9328 தோற்றியதுடன் 70 மேல்  7782 (83.45%) மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 1408 (15.10%) மாணவர்களும் சித்தியடைந்தனர். மாவட்ட ரீதியான இத்தரவுகள்  தமிழ் மொழியுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழி மூல பரிச்சாத்திகளின் அடைவு மட்டத்தின் போதமையினை  வெளிப்படுத்துகிறது.



தமிழ் மொழிப் பாடசாலைகளின் பெறுபேறுகள்


வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் 164 பாடசாலைகளில் மொத்தமாக 5928 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றினர். குருணாகல் மாவட்டத்தில் தமிழ் மொழியில் தோற்றிய மொத்த மாணவர்கள் 2470 என்பதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள்  1989  (80.53%) என்பதுடன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  194 (7.85%) மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் தோற்றிய மொத்த மாணவர்கள் (தமிழ்); 3458  என்பதுடன் 70 மேல் 2450 (70.85%) மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  253 (7.32%) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


70 புள்ளிகளுக்கு கீழ் புத்தள மாவட்டத்தில் 1008 மாணவர்களும், குருணாகல் மாவட்டத்தில் 479 மாணவர்களும் காணப்படுகின்றனர். இரண்டு மாவட்டங்களிலும் 1487 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு கீழ் என்பது கிட்டத்தட்ட 25%ஆகும்.  அதாவது பரிட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 4 இல் 1 மாணவர் புலமை பரிசில் பரிட்சையில் 70 கீழ் புள்ளிகளைப் பெற்றிருப்பது என்பது தமிழ் மொழிப் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் 2024 ஆண்டு 25 வீதமான மாணவர்கள் அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகளை அடையாத நிலை காணப்படுகிறது. இதுவே நாம் சிந்திக்க வேண்டிய அவதானத்துக்குரிய தரப்பினராக அடையாளப்படுத்த முடியும்.


குருணாகல் மாவட்ட மாணவர்களின் புள்ளிப் பகுப்பாய்வுகளை நோக்குகையில் புத்தளம் மாவட்டத்தில் 200 மாணவர்கள் இரண்டு பாடங்களிலும்  50 இற்கும் குறைந்த புள்ளிகளைப் பெற்றிருப்பதுடன் குருணாகல் மாவட்டத்தில் இத்தொகை 97 ஆகும். 


வலய ரீதியான பெறுபேறுகள் (தமிழ்ப் பிரிவு)


வலய ரீதியில் நோக்குகையில் கிரியுள்ள வலயம் தோற்றிய மொத்த மாணவர்கள் 614 (62 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 100 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு கீழ்) இப்பாகமுவ வலயம் தோற்றிய மொத்த மாணவர்கள் 431 (37 வெட்டுப் புள்ளிக்கு மேல்  70 புள்ளிகளுக்கு கீழ் 85) மாகோ வலயம் மொத்த மாணவர்கள் 240  (20 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 70 புள்ளிகளுக்கு கீழ் 45) நிகவெரட்டிய வலயம் மொத்த மாணவர்கள் 261 (20 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 70 புள்ளிகளுக்கு கீழ் 31) குளியாப்பிடிய வலயம்  396 மாணவர்கள் (27 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகழுக்கு மேல் 70 புள்ளிகளுக்கு  கீழ் 74) குருணாகல் வலயம் மொத்த மாணவர்கள் 528 (29 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்  70 புள்ளிகளுக்கு கீழ் 146) 


புத்தள வலயம் தோற்றிய மொத்த மாணவர்கள் 3146  (237 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 70 புள்ளிகளுக்கு கீழ் 938) சிலாபம் வலயம் மொத்த மாணவர்கள்  311 (16 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 70 புள்ளிகளுக்கு கீழ் 69) 


வலய ரீதியில் நோக்குகையில் குருணாகல் மாவட்டத்தில் 70 புள்ளிகளுக்கு கீழ் பெற்ற மாணவர்களில் குருணாகல் வலயத்திலேயே 146 மாணவர்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது. இத்தொகை புத்தள வலயத்தில் 938 ஆகும்.


அவதானத்துக்குரிய தரப்பு யார்…?


எட்டு வலயத்திலும் 70 புள்ளிகளுக்கு கீழ் பெற்ற 1487 மாணவர்கள் அவதானத்துக்குரிய மாணவர் தரப்பாக கருதப்பட வேண்டியவர்கள். ஒட்டு மொத்த பாடசாலை சமூகத்தின்  கவனக்குவிப்பை வேண்டி நிற்பவர்கள்.  பாடசாலை வழமையின் பிரகாரம் இவர்கள் தரம் 6 இற்கு வகுப்பேற்றப்படுவர். குறித்த வகுப்பில் கணிதம், தமிழ் போன்ற பாடங்களில் அடிப்படை தேர்ச்சிகள் எண்ணக்கருக்கள் குறைவாக இருக்கும் போது பெரும்பாலும் அனைத்துப் பாடங்களிலும் குறித்த மாணவர்களின் தேர்ச்சி நிலை அடைவு பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. 


 மொழிப் பாடத்தில் ஏற்படும் பின்னடைவு என்பது அனைத்து பாடங்களினதும் கிரகித்தலில் இடர்பாட்டினை ஏற்படுத்தும். தவிரவும், இவர்களே க.பொ.தா. சா/த பரீட்சையிலும் பெறும்பாலும் குறைந்த மட்ட சித்தியினை அடையாத நிலையில் (3/5) பரிட்சையில் தோல்வியடைவும் தரப்பாக அமைவர்.  எனவே இந்நிலையினை இழிவளவாக்குவதற்கும் மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்க தரம் 6 வகுப்பாசிரியர் உட்பட ஏனைய பாட ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் அதிபர் பெற்றோர் இணைந்து மேற்படி மாணவர்களுக்கான பரிகார வேலைத்திட்டங்களை ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டியது பாடசாலைகளின்; முதன்மைப்படுத்தப்பட பணியாக கருதலாம்.


வசதிகளுக்கு ஏற்ப மேற்படி தரப்பு மாணவர்களுக்கான விசேட பரிகார திட்டங்கள் திட்டமிட்ட முறையில், குறைந்தது முதலிரண்டு வருடங்களிலாவது நடாத்தப்பட வேண்டும். எனவே வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வெற்றிகளை கொண்டாடுவதற்கு மேற்கொள்ளும் ஏற்பாடுகளை விடவும், 70 புள்ளிகளை விட குறைந்த நிலையில் உள்ள தரப்பு மாணவர்களை வளப்படுத்தும் விடயத்தில் ஒவ்வொரு பாடசாலையும் வினையமாக சிந்தித்து திட்டமிட்டு செயற்படவேண்டியது  இன்றியமையாதது என்பது எனது அவதானம்.  


எனவே, இது தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்கள்,  கலந்துரையாடல்கள் நீளுவதும் ஆரோக்கியமானது.




No comments