பாதுகாப்பு கட்டமைப்பில் கவனம் செலுத்தும் அரசு. நிராகரிக்கப்பட்ட சவேந்திர சில்வாவின் விண்ணப்பம். ஓர் அலசல்.
நாட்டின் முப்படைகளின் கட்டமைப்பு, புலனாய்வுத்துறை ஆகியவற்றில் சத்தமின்றி பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. படைத்துறையில் உள்ள பொறுப்புக்களில் அரசியல் பின்புலம் சாராதவர்களை நியமிப்பதாக இதற்கு காரணம் கூறப்படுகின்றது.
இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் பின்புலம் இல்லாதவர்களை கண்டுபிடிப்பது இலகுவான காரியமல்ல. அத்துடன் ஆட்சியாளர்களின் மொழியில் “அரசியல் பின்புலம் சாராதவர்கள்” என்பது ஆட்சியாளர்களுக்கு சார்பாகவும், எதிர்கட்சியினர்களுக்கு எதிரானவர்களையும் குறிக்கும்.
எமது பாசையில் கூறுவதென்றால் அரசாங்கம் படைத்துறையில் தனக்கு விசுவாசமானவர்களை தேடுகின்றது. இன்று முப்படைகளிலும் உள்ளவர்களில் அதிகமானவர்கள் கடந்த ஆட்சிக் காலங்களில் பதவி உயர்வு மற்றும் சலுகைகளை அனுபவித்தவர்கள்.
இதனாலேயே பாதுகாப்புத் துறையில் பதவி நீடிப்புக்கோரிய பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முப்படைகளின் பிரதானியான சவேந்திர சில்வா, இராணுவ தளபதி மற்றும் இன்னும் பலரது பதவி நீடிப்பு கோரிக்கைகளும் இந்த நிராகரிப்பில் அடங்குகின்றது.
சில பொறுப்புக்களிலிருந்து அதிகாரிகளை தூக்கியுள்ளதுடன், பாதுகாப்பு துறையில் தொடர்பில்லாதவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் எவரையும் நியமிக்கப்படாத வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
பாம்பின் கால் பாம்புதான் அறியும் என்பார்கள். அதாவது கோத்தபாய ராஜபக்சவுக்கு நடந்ததுபோல் எதிர்காலங்களில் தங்களுக்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் ஜனாதிபதி அனுரகுமாரவின் அரசாங்கம் மிக விழிப்பாக உள்ளது.
கோத்தாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான அரகலய போராட்டத்தில் JVP யின் பங்களிப்பு, அதற்கான ஏற்பாடுகள், நிதி வழங்கியது, பின்னனியில் செயற்பட்டவர்கள் என அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்தவர்கள் JVP யினர். அத்துடன் இவர்கள் இராணுவ கட்டமைப்பாக செயற்பட்டு ஆயுதம் ஏந்தி ஆட்சி கவிழ்ப்பை மேற்கொள்ள முயன்று தோல்விகண்டவர்கள்.
இறுதிப்போரில் யுத்தக் குற்றம் செய்ததாக சவேந்திர சில்வா மீது தமிழ் தரப்பினர் குற்றம் சுமத்திய நிலையிலும், அவரை ஐ.நா சபையின் தூதுவராக மஹிந்த ராஜபக்ச அரசு நியமித்து கௌரவித்ததுடன், படைத்துறையில் மூத்த அதிகாரிகள் இருக்கத்தக்கதாக பல உயர் பதவிகளை சவேந்திர சில்வாவுக்கு ராஜபக்சவினர் வழங்கினர்.
ஆனாலும் அரகலய போராட்டம் உச்சம் தொட்டபோது அலறி மாளிகையில் அகப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறுவதற்காக உதவிகோரி சவேந்திர சில்வாவை பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோதும், அதற்கு அவர் பதில் வழங்காமல் புறக்கனித்ததன் காரணமாக இராணுவத்தில் நம்பிக்கை இழந்து கடற்படையின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் மஹிந்த ராஜபக்ச தஞ்சமடைந்தார்.
ராஜபக்சவினரால் பாலூட்டி வளர்க்கப்பட்டவரே இறுதி நேரத்தில் கைவிரித்தார் என்றால் நாங்கள் எம்மாத்திரமென்று ஜனாதிபதி அனுரகுமார சிந்திக்காமல் இருந்திருக்கமாட்டார்.
எனவே கடந்த காலங்களை அனுபவமாகக்கொண்டு பலமான ஆட்சியை கொண்டுசெல்வதற்கு பாதுகாப்புத்துறை முதன்மையானது என்பதனால்தான் அதனை ஆட்சிக்கு விசுவாசமான ஒன்றாக கட்டியமைப்பதில் அனுரகுமாரவின் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments