ஓய்வு பெற்ற முன்னாள் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் மறைந்தார்.
(க.மகாதேவன்)
ஒரு மாமனிதரை வடமேல் மாகாணம் இழந்து விட்டது. புத்தளம் வலயக்கல்விப் பணிமனையில் வலயக்கல்விப் பணிப்பாளராகவும், பின்னர் பதவி உயர்வு பெற்று வடமேல் மாகாணக் கல்விப்பணிப்பணி மனையில் மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும், பின்னர் வடமேல் மாகாண நீரியல் வள அமைச்சர் மறைந்த கௌரவ சனத் நிசாந்த அவர்களின் செயலாளர் ஆகவும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வலுமிக்க ஓர் உறுப்பினர் ஆகவும், துடிப்பு மிக்க ஒரு தொழிற்சங்கவாதியாகவும் இன்னும் பல்வேறு பொதுநல அமைப்புகளில் இணைந்து பிரதேசத்துக்கு அளப்பரிய பணிகளைச் செய்த உயர்திரு பீ.எம்.அசோக்க ஜயசிங்க அவர்கள் (7) திகதி அமரத்துவம் அடைந்தார்.
ஒரு மேலதிகாரி என்ற பார்வையில் அவர் அமர்ந்த இருக்கைகள் இவரால் மிக்க மதிப்புப்பெற்றன என்றால் அது மிகையாகாது.
நமது தீவில் அரசியல் கலாசாரத்தின் தாக்கத்தால் கட்சி பேதங்களைப்பார்த்து இவர் மீது சிலர் எரிச்சலையும் கோப உணர்வுகளையும் கொண்டிருந்தனர். இவர் புத்தளம் நகரைப் பொறுத்தவரை ஒரு நல்ல மனித நேயமிக்க அதிகாரி எனலாம். கல்விப்புலத்தில் கல்விச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நாட்களில் அவற்றை நடைமுறைப்படுத்த இவர் எடுத்த பிரயத்தனங்களை எல்லோரும் அறிவர்.
குறிப்பாக பாடசாலைகளின் கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பம், தர உள்ளீடுகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பம் போன்றவை இவரின் முக்கிய பங்காகும். பாடசாலைகளில் ஏற்பட்ட முரன்பாடுகளைத் தீர்த்து வைப்பதில் இம்மாமனிதர் எடுத்த முடிவுகள் பாராட்டக் கூடியவையாகும். எந்தவித மொழி பேதங்களையும் காட்டாது உடன் பிறந்த ஒரு சகோதரர் போல மக்களோடு உரையாடுவார். இவரின் மறைவு புத்தளம் மக்களின் பேரிழப்பாகும்.
No comments