Breaking News

விற்பனை செய்யப்பட்ட வாடகைக் காரை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 

கொழும்பில் ஒருவரிடம் இருந்து 5 மாத காலத்திற்கு வாடகை அடிப்படையில் கார் ஒன்றினை மதுகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார். காரை வாடகைக்கு பெற்றவர், அதனை சம்மாந்துறைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.


இந்நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அதிரடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த காரை கைப்பற்றியுள்ளனர்.


காரின் உரிமையாளர் தமது கார் குறித்து வாடகைப் பெற்றவரிடம் விசாரித்த போது முரண்பாடான கருத்துக்களை முன் வைத்துள்ளார். அத்தோடு கார் களவு போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தமது கார் சம்மாந்துறை பிரதேசத்தில் இருப்பதை அறிந்து கொண்ட உரிமையாளர், சம்மாந்துறை பொலிஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் காரை கைப்பற்றி உள்ளனர்.


பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் 2024.08 மாதம் குறித்த காரை 5 மாத வாடகைக்கு பெற்றவர், அக்காரை ஒரு கோடியே 20 லட்சத்திற்கு அதிகமான தொகைக்கு சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.


இந்த நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் டபிள்யூ.ஏ. சரத், சார்ஜன் ஏ.பி.நபார் உள்ளிட்ட குழுவினர் இவ்விசாரணைகளில் ஈடுபட்டனர்.


இதுதொடர்பான, மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments