ஹக்கீமின் காலம் கடந்த சிந்தனை : எங்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி !
நூருல் ஹுதா உமர்
கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை (ஜனாஸா) பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்துக்குத் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாத அந்தப் பிரேரணை (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த விடயமானது காலம் கடந்த சிந்தனையாக இருந்தாலும் பாராட்டத்தக்கது என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், கடந்த வருடம் இறுதிப்பகுதியில் தகனம் தொடர்பான தீர்மானத்தை எடுத்த குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் "பாராளுமன்றத் தெரிவுக்குழுவை" நியமிக்க வேண்டும். அநீதியான சம்பவத்தை செய்த குழுவிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சபாநாயகரிடம் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதற்கும், ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோர 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாகவும் அந்த காலப்பகுதியில் வெளிகொண்டு வந்திருந்தோம்.
அந்த கோரிக்கையை ஏற்று காலம் தாமதித்தேனும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதுபோன்று ஏனைய உறுப்பினர்களும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டியது கட்டாயமாகும் என வலியுறுத்த விரும்புகிறேன்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் பிரஸ்தாப பிரேரணையில் குறிப்பிட்டுள்ள கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில், மேற்படி சடலங்ளை நல்லடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாய நிலை உள்ளதாகக் கூறி கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கை அளவிலான தீர்மானத்தின்படி செயற்பட்டமையும், அந்த சடலங்களை உறவினர்களின் உடன்பாடின்றி தகனம் செய்தமையும் , பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமை சரியானதல்ல, தவறு என்று தெரிவித்து அரசாங்கமே உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தமையும் இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களை பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாமையும் இது குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தகனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டமாவடியில் , மஜ்மா நகர் எனப்படும் தனிமையான பிரதேசத்தில் மேற்படி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், குடும்ப உறவினர்கள் இறுதி கடமைகளைச் செய்வதற்கோ, மரியாதை செலுத்துவதற்கோ, உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் பாரதூரமான தவறுகளை புரிந்துள்ளமையினாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும்படியான கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments