புத்தளத்தில் தொடராக நடாத்தப்பட்டு வந்த காற்பந்தாட்ட தொடர். தோல்வி அடையாமல் சகல ஆட்டங்களையும் வெற்றி கொண்ட புத்தளம் லிவர்பூல் அணி தொடரை கைப்பற்றி சாதனை சம்பியனாகியது.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் காற்பந்தாட்ட லீக்கினால் புத்தளத்தில் தொடராக நடாத்தப்பட்டு வந்த புள்ளிகள் அடிப்படையிலான காற்பந்தாட்ட தொடரின் சம்பியனாக, புத்தளத்தில் சம்பியன் கிண்ணங்களை தொடராக சுவீகரித்து வருகின்ற பிரபலமான காற்பந்தாட்ட கழகமான லிவர்பூல் கழகம் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
மொத்தமாக 66 போட்டிகளை கொண்ட இந்த போட்டி தொடரை புத்தளம் காற்பந்தாட்ட லீக் கடந்த 2023 டிசம்பர் மாதத்திலிருந்து நடாத்தி வருகின்றது.
இந்த தொடரிலே தனக்கான 11 போட்டிகளையும் வெற்றி கொண்ட பலம் வாய்ந்த அணியாக லிவர்பூல் அணி திகழ்கிறது. புத்தளம் நகர காற்பந்தாட்ட வரலாற்றில் தொடர் ஒன்றில் அனைத்து போட்டிகளையும் வெற்றி கொண்ட அணியாகவும் லிவர்பூல் அணி சாதனையாக பதிவு செய்துள்ளது.
இந்த போட்டி தொடரில் லிவர்பூல் அணி இறுதியாக எதிர்கொண்ட போல்டன் அணியுடனான போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (10) புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
லிவர்பூல் அணிக்கான இந்த இறுதிப்போட்டியில் அணியின் 20 வயது இளம் வீரர் முஹம்மது ஆசிக் பெற்றுக்கொண்ட அதிரடியான கோல் ஒன்றின் மூலம் லிவர்பூல் அணி 01 : 00 என்ற கோல் கணக்கில் தனது 11வது ஆட்டத்தின் வெற்றியையும் உறுதிப்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் மொத்தமாக 33 புள்ளிகளையும் தனதாக்கி சம்பியனாகியது. தொடரில் மொத்தமாக 29 கோல்களை செலுத்தியுள்ள லிவர்பூல் குறைந்தளவான 06 கோல்களை மாத்திரமே வாங்கியுள்ளது.
லிவர்பூல் அணிக்கான இந்த தொடரின் கடைசி போட்டியை கண்டு களிக்க புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கானது அதிகமான ரசிகப் பெருமக்களால் நிறைந்து வழிந்ததை காணக் கூடியதாக இருந்தது.
ஒரு காற்பந்தாட்ட அணிக்கு அதிகளவான ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களை தன்னகத்தே கொண்ட அணியாகவும் லிவர்பூல் அணி கருதப்படுகிறது.
புதிய நிர்வாகத்தின் சிறந்த வழிகாட்டலில் லிவர்பூல் அணி அண்மைக்காலமாக தொடரான பல வெற்றிகளை அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போல்டன் அணியுடனான இந்த கடைசி போட்டியிலே லிவர்பூல் அணிக்கு முகாமையாளராக எச்.ஹம்ருசைனும், பயிற்றுவிப்பாளராக எம்.ஓ.ஜாக்கிரும் கடமையாற்றினர்.
கூடிய விரைவில் நடைபெறவுள்ள இதற்கான பரிசளிப்பு விழாவில் இலங்கையின் பிரபலமான காற்பந்தாட்ட கழகம் ஒன்று லிவர்பூல் அணியுடன் கண்காட்சி போட்டியில் பங்கேற்கவுள்ளது.
புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் தலைவர் முன்னாள் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையிலான புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
No comments