Breaking News

மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமா ? JVP தலைவருக்கும், செயலாளருக்கும் இடையிலான முரண்பாடு.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் 04.12.2024 திகதி ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். 


அதில், தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமை ஒழிக்கப்படுமா என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டதற்கு, அவ்வாறு மாகாணசபை முறையை ஒழிக்கும் எந்தவித நோக்கமும் எங்களுடைய அரசிடம் இல்லையென்றும், தொடர்ந்து மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என்றும், மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரமும் குறைக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியாக கூறியுள்ளதாக தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. 


புதிய அரசியலமைப்பின் மூலமாக 13வது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாகாண சபை முறைமை முடிவுக்கு வருமென்று JVP யின் பொது செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் கடந்த 01.12.2024 திகதி வெளியிட்ட கருத்துக்கு அமைவாகவே ஜனாதிபதியிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.  


இதன்மூலம் ஜனாதிபதி பதவியில் உள்ள JVP தலைவருக்கும், செயலாளருக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதென்பது தெரிகின்றது. இவ்வாறான முரண்பாடுகள் நாளடைவில் வலுப்பெற்று JVP க்குள் பிளவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறமுடியாது. 


ரில்வின் சில்வா பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்கள் மூலம் மாகாணசபை முறைமையை ஒழிப்பது JVP யின் அடிப்படைக் கொள்கையே தவிர, ரில்வின் சில்வாவின் தனிப்பட்ட கருத்து அல்ல என்பதை மறுக்க முடியாது. 


ரில்வின் சில்வா கட்சி அதிகாரத்தை மாத்திரம் கொண்டுள்ளதனால் பொறுப்பற்ற முறையில் எவ்வாறான கருத்துக்களையும் கூறலாம். ஆனால் ஜனாதிபதி என்ற பொறுப்புள்ள பதவியில் இருப்பதனால் ரில்வின் சில்வா போன்று அனுரகுமார திசாநாயக்காவினால் கருத்துக் கூற முடியாது. 


13 வது திருத்தம் மூலமாக இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறையை ஒழிப்பதென்பது இந்தியாவை சீண்டுவதாக அமையும். இவ்வாறான விசப்பரீட்சையில் அனுரகுமார திசாநாயக்கா இறங்கமாட்டார்.   


எது எப்படி இருப்பினும் மாகாணசபை முறைமையை ஒழிப்பதென்பது JVP யின் அடிப்படைக் கொள்கை என்பது மாத்திரம் நன்றாக புரிகின்றது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது 


ஜனாதிபதியுடனான இலங்கை தமிழரசு கட்சியினர் சந்திப்பில் பேசப்பட்டது பற்றிய அலசலை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.





No comments

note