HDS, ஐ.எஸ் போராளிகளுக்கு இஸ்ரேல், அமெரிக்கா ஆதரவு வழங்கியதா ? சிரியா போர்க்களம் பற்றிய ஒரு பார்வை.
2011 தொடக்கம் 2020 வரை ஒன்பது வருடங்கள் நடைபெற்ற போரில், போராளிகளுக்கு எதிராக அரச படைகள் கடுமையான எதிர் தாக்குதல்களை நடாத்தி பசர் அல்-அசாத் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்றால், தற்போது 27.11.2024 தொடக்கம் 08.12.2024 வரையான பன்னிரெண்டு நாட்களுக்கு பசர் அல்-அசாத்தின் படைகளினால் ஏன் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
அமெரிக்கா - ரஷ்யா ஆகிய வல்லாதிக்க சக்திகளின் பலப்பரீட்சைக் களமாக சிரியா போர்க்களம் இருந்தது. சிரியாவின் பல பிரதேசங்கள் வெவ்வேறு இயக்கங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தாலும், தலைநகர் உட்பட சிரியாவின் அறுபது வீதமான (60%) பகுதி பசர் அல்-அசாத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.
தற்போதைய இந்த போரில் படையினர்களின் சம்பள அதிகரிப்பையும், வேறு சலுகைகளையும் ஆட்சியாளர் பசர் அல்-அசாத் அறிவித்திருந்தும் சிரியாவின் அரச இராணுவம் போர் செய்யவில்லை.
சிரியாவின் ஆங்காங்கே சில இடங்களில் மாத்திரமே போராளிகளுக்கு எதிராக எதிர் தாக்குதல்களை நடாத்தினார்கள். பல இடங்களில் அரச படையினர் சண்டையிடவில்லை. சில இராணுவ முகாம்கள் போராளிகளின் முகாம்களாக மாறியது. சில இடங்களில் சரணடைந்தனர். சில படைப்பிரிவினர் எல்லையோரமாக அகதிகள் போன்று நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். இன்னும் சில இடங்களில் போராளிகளுக்கு உதவி செய்தனர்.
இவ்வாறான நிலையில், ஆரம்பத்தில் சிரியா படையினர்களுக்கு உதவிக்காக விரைந்துசென்று தாக்குதல்கள் நடாத்திய ரஷ்யாவின் விமானப்படைகள் பின்பு நிலைமையை உணர்ந்து தங்களது தாக்குதல்களை நிறுத்திக்கொண்டனர்.
மேலும், கட்டாரில் நடைபெற்ற அவசர பேச்சுவார்த்தையின் பயனாக இந்த போரில் தலையிடுவதனை ஈரான் தவிர்த்துக்கொண்டதுடன், HDS இயக்கத்துடன் ஈரான் உறவை ஏற்படுத்தியதனால் சிரியாவில் இருந்த ஈரானிய படையினர்களும் திருப்பி அழைக்கப்பட்டனர். அத்துடன் ஈரானின் ஆதரவுடன் சிரியாவுக்குள் செல்ல தயாராக இருந்த முப்பது ஆயிரம் ஈராக்கிய படையினர் தங்களது திட்டத்தை கைவிட்டனர்.
ஈரான் உத்தரவு வழங்காததன் காரணமாக ஹிஸ்புல்லாஹ் இயக்கமும் உதவிக்காக சிரியாவுக்குள் செல்லவில்லை. பசர் அல்-அசாத்துக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு வழங்குவதனால் ஈரான் மீது சிரியா மக்கள் அதிருப்தியில் இருந்ததனை ஈரான் அறியாமலில்லை.
அது ஒருபுறமிருக்க சிரியாவின் இராணும் விட்டுச்சென்ற கனரக ஆயுதங்கள் HDS போராளிகளின் கைகளுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு மையங்கள், விஞ்ஞான ஆராய்ச்சி கூடம், ஏவுகணை தயாரிப்பு மையம், ஆயுத கிடங்குகள், ரேடார் நிலையங்கள் போன்ற நூற்றுக்கணக்கான இடங்கள் விமானத் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐ.எஸ் இயக்கத்தின் நிலைகள் மீது அமெரிக்கா B52 விமானம் மூலமாக தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
இஸ்ரேலின் ஆதரவுடன் HDS இயங்குவதாக சில குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால் HDS யின் கைகளுக்கு சிரியாவின் ஆயுதங்கள் செல்வதை ஏன் இஸ்ரேல் தடுத்து அழிக்க வேண்டும் ?
HDS இயக்கத்துடன் தொடர்புள்ள ஐ.எஸ் இயக்கத்தை அமெரிக்கா வளர்ப்பதாக கூறுவது உண்மையென்றால் ஏன் ஐ.எஸ் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்த வேண்டும் என்பது எனது கேள்விகளாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments