முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரின் மறைவிற்கு கட்சியின் தலைவர் அனுதாபம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத் எங்களை விட்டுப் பிரிந்த செய்தியை அறிந்ததும் ஆழ்ந்த கவலையடைந்தேன்.
சன்மார்க்கப்பற்றும், சமூகப்பற்றும், நாட்டுப் பற்றும் ஒருங்கே அமையப்பெற்றிருந்த அன்னார் பெருந்தலைவர் எம். எச்.எம் .அஷ்ரப் அவர்களோடு தோளோடு தோளாக நின்று ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் ஆரம்ப காலம் முதல் ஆற்றிய பணிகள் அளப்பரியன .கட்சி செழிப்புடன் திகழ்ந்த போதெல்லாம் அவரது பங்களிப்பு எவ்வாறிருந்ததோ, அவ்வாறே எமது கட்சி சோதனைகளைச் சந்தித்த காலகட்டங்களிலும் துவண்டு விடாமல் அவற்றிற்கு துணிச்சலுடன் முகம் கொடுக்கும் திராணியை அவர் இயல்பாகவே பெற்றிருந்தார். எங்கள் மத்தியிலும் திடகாத்திரத்தை கட்டி யெழுப்புவராகவும் அவர் காணப்பட்டார்.
இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த போதும், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்த போதும் கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்து, சீரான செயல்பாட்டிற்கு அவர் வலுவூட்டினார்.
பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை தேர்தல் காலங்களில் நாடெங்கிலும் சென்று கட்சியின் பிரசாரப் பணிகளில் அயராது ஈடுபட்டு பீரங்கிப் பிரசங்கங்கள் செய்ததன் பயனாக "முஸ்லிம் முழக்கம் "என்ற அடைமொழியை மறைந்த எமது பெருந் தலைவர் அவருக்குச் சூட்டியிருந்தார் .கட்சியைப் பற்றிய தகவல் களஞ்சியமாகவும் அவர் விளங்கினார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலைமையிலும் பொறுமையோடு அதனை சகித்துக் கொண்டு , இறுதி மூச்சு வரை கட்சியின் பணியில் தன்னை சகோதரர் அப்துல் மஜீத் அர்ப்பணித்திருந்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பிரதிநிதித்துவத்தை முன்னரைப் போலவே தக்கவைத்துக் கொண்டதையிட்டு அவர் புளகாங்கிதம் அடைந்திருந்தார்.
புன்முறுவல் பூத்த முகத்துடன் எல்லோருடனும் மனம் விட்டுப் பழகிய அவரது மறைவு கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அவர் வாழ்ந்து மறைந்த மண்ணின் மக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மக்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தை அருள வேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போமாக.
ரவூப் ஹக்கீம் ,பாஉ
தலைவர் ,முஸ்லிம் காங்கிரஸ்.
No comments