Breaking News

அனுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா ?

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்டது. 


அதில், தேசிய இனப்பிரச்சினை, மாகாணசபை முறைமை, காணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம், கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் கல்முனை வடக்கு பிரேதச செயலக தரம் உயர்த்தல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. 


இதில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழ் தரப்பின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்வினை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும்,   


தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை தொடர்ந்து நடைமுறைப்படுவதுடன், மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரமும் குறைக்கப்பட மாட்டாது என்றும், 


காணிகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லையென்றும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை முழுமையாக அல்லது கட்டம் கட்டமாக விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், 


பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கடந்த காலங்களில் JVP யினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த சட்டத்தின் இறுக்கமான போக்கை நீக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால் சில இனவாதிகள் இதனை வேண்டுமென்று குழப்ப முயற்சிப்பார்கள் என்பதனால் இதனை கவனமாக ஆராய உள்ளதாகவும், 


இழுபறியாக இருக்கின்ற கைதிகள் விடையத்தில் சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், 


இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கவனமாக கையாள உள்ளதாகவும், 


வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு தமிழரசு கட்சியில் உள்ளவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென்றும், 


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் பற்றிய நிருவாக விடையத்தில் அரசியலுக்கு அப்பால் நடைமுறைப்படுத்துவேன் என்றும்  ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.  


ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பினால் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருப்தியை வெளியிட்டுள்ளனர். இவ்வாறுதான் நல்லாட்சி காலங்களிலும் அடுத்த தீபாவெளிக்குள் தீர்வு கிடைத்துவிடுமென்று இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் ஒவ்வொரு வருடமும் கூறிக்கூறி காலங்கள் கரைந்தது. 


இங்கே பேச்சுவார்த்தை மூலமாக ஏற்றுக்கொண்ட விடையங்களை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் நடைமுறைப்படுத்துவாரா அல்லது நல்லாட்சிக் காலத்தில் ஏற்பட்டதுபோன்று தடைகள் ஏற்படுமா என்பதனை சில மாதங்களில் உணர்ந்துகொள்ளலாம்.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note