மு.கா. கட்சிக்கு அட்டாளைச்சேனை பிரதேசம் ஆதரவு வழங்கியமைக்காகவே இம்முறை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது - பா.உ. உதுமாலெப்பை
கே ஏ ஹமீட்
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய காலத்திலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் கட்சிக்கு பெரும்பான்மையான ஆதரவு வழங்கி வந்தனர். இதுவரை காலமும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் அம்பாரை மாவட்டத்தில் கட்சிக்கு 1, 2, 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கி வந்தனர். இதனால்தான் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்
அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து இறைவனின் உதவியால் ஒரு பாராளுமன்ற பிரநிதித்துவம் நமது கட்சிக்கு கிடைத்துள்ளது என்பதுதான் யதார்த்தம் எனவும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள 16 பிரதேசங்களிலிருந்து நமது கட்சியின் சின்னமான மரச்சின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகளினால்தான் நமது கட்சிக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதே மற்றுமொரு யதார்த்தமாகுமென நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான 5 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு விழா நடாத்துவது தொடர்பான விசேட கூட்டம் அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவர் எஸ்.எல். ஹலீம் தலைமையில் BEACH HOUSE மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்….
நடைபெற்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட நமது கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையும் கிழக்கு மாகாணத்தில் நமது கட்சியை தோற்கடிப்பதற்கு கட்சிக்குள்ளிருந்தும், கட்சிக்கு வெளியிலிருந்தும் சதிகள் இடம்பெற்றன. இச்சதிகளைத் தாண்டி இறைவனதருளால் நமது கட்சிக்கு 5 பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளன. கட்சிக்குள்ளிருந்து கொண்டு கட்சித் தலைமையையும், கட்சியையும் தோற்கடிப்பதற்கு சதி செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்சி மேற்கொண்டு வருகின்றது. கடந்த காலங்களில் எமது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கும் தலைமைக்கும் வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக செயற்படாத காரணத்தால் நமது கட்சி பல சவால்களை எதிர்நோக்கி வந்தது. இந்த நிலைமை மாறி கட்சிக்கும் தலைமைக்கும் மக்களுக்கும் விசுவாசமாக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருவது கட்சியின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.
விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச்சட்ட மூலம் அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இயங்கும் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்தி 159 பெரும்பான்மையை பெற்றுள்ளார். இதனையடுத்து விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் நடாத்தி பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நமது அம்பாரை மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்று நமது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்தார்.
No comments