முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் சேகுவின் வகிபாகம்.
மூன்றாவது தொடர்.........
முஸ்லிம் இராணுவமும், இந்தியா ஆயுதம் வழங்கியதாக சேகு CID யால் விசாரணயும்.
தலைவர் அஷ்ரப்பிடம் ஒரு பண்பு இருந்தது அதாவது அவர் போட்டியிட்ட எந்த தேர்தல்களிலும் பிரச்சார மேடைகளில் “எனக்கு அல்லது எனது இலக்கத்துக்கு வாக்களியுங்கள்” என்று கூறியதில்லை. அதுபோலவே சேகுவும் கூறியதில்லை.
1989 இல் நடைபெற்ற பொது தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தலைவரது முதலாம் இலக்கத்தையும் சேர்த்துத்தான் மகளிடம் வாக்கு கேட்டார்கள். அதாவது தலைவரது இலக்கத்துக்கு வாக்களிப்பது கட்டாயமாகும்.
அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த ஒரு ஆசனத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் அடிப்படையில் தலைவர் தெரிவானார். இரண்டாவது ஆசனம் கிடைத்திருந்தால் அதற்கு சேகுதான் தெரிவாகியிருப்பார்.
ஆனால் சேகுவுக்கு திட்டமிட்டு கழுத்தறுப்பு செய்ததாக கட்சிக்குள் ஒரு கூட்டம் புரளியை கிளப்பியது. அதில் எந்தவித உண்மையும் கிடையாது. பாராளுமன்றத்தில் சேகுவும் தன்னுடன் இருந்திருக்க வேண்டுமென்றே தலைவர் விரும்பினார்.
சேகு அக்கரைப்பற்றை சேர்ந்தவர் என்பதனால் தனது ஊரை நூறு வீத முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுத் தளமாக மாற்றினார். ஆனால் பலம்பொருந்திய அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அதிகாரத்தில் இருந்ததன் காரணமாக அஷ்ரப்பினால் கல்முனைகுடியை முஸ்லிம் காங்கிரசின் தளமாக மாற்ற முடியவில்லை.
கல்முனைக்குடி மட்டுமல்ல, அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய ஊர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பலம்பொருந்திய பிரமுகர்கள் இருந்ததன் காரணமாக குறிப்பிட்ட ஊர்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய சவால்கள் இருந்தது.
இந்திய படையினர்களின் பாதுகாப்புடன் வடகிழக்கு மாகாண சபையை EPRLF ஆட்சி செய்தாலும் எந்த நேரத்திலும் புலிகள் தங்களை தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும், இந்திய படையினர் நாட்டைவிட்டு வெளியேறினால் அடுத்தகட்ட பாதுகாப்பு பற்றிய சந்தேகமும் EPRLF இயக்கத்திடம் காணப்பட்டது. அதனால் இந்திய படையின் அனுசரணையில் முதலமைச்சர் வரதராஜ பெருமாளினால் TNA என்னும் தமிழ் தேசிய இராணுவம் நிறுவப்பட்டு தமிழ் பிரதேசங்களில் முகாம் அமைத்து செயற்பட்டதுடன், பல அத்துமீறல்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
TNA மட்டுமல்ல தமிழ் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக முஸ்லிம் மக்களை பாதுகாக்கும் நோக்கில் முஸ்லிம் இராணுவம் அமைக்கப்படல் வேண்டுமென்ற முயற்சியினை சேகு மேற்கொண்டார். அந்தவகையில் அக்கரைப்பற்றில் புலி அன்சார் தலைமையில் முகாம் ஒன்று அமைக்கப்பட்டு சில காலம் இயங்கியது.
முஸ்லிம் கிராமங்களை பாதுகாப்பதற்காக CVF என்னும் படைக்கு முஸ்லிம் இளைஞர்கள் திரட்டப்பட்டு இந்திய படையினரின் பயிற்சிக்காக திருகோணமலைக்கு அனுப்பப்பட்டபோது அங்கு சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதுடன், சில முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அதனால் அங்கு எஞ்சியிருந்த முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணியில் சேகுவின் பங்களிப்பை மறக்க முடியாது.
முஸ்லிம் காங்கிரசுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கியதாக அப்போது குற்றச்சாட்டுக்கள் இருந்தது. இதற்காக குற்றப் புலனாய்வு துறையின் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு சேகு இஸ்சடீன் விசாரிக்கப்பட்டார். இது அப்போது பரபரப்பான செய்தியாகும்.
தொடரும்..........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments