கல்முனை மாநகர சபையினால் கௌரவிக்கப்பட்ட ஆணையாளர் நௌபீஸ்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராக இடமாற்றலாகி செல்லும் என்.எம். நௌபீஸ் அவர்களுக்கான பிரியாவிடை மற்றும் சேவை நலன் பாராட்டு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (30) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், அபிவிருத்தி உத்தியோகத்தர் டிலிப் நௌஷாத், வருமானப் பரிசோதகர் ஏ.ஜே. சமீம் உள்ளிட்டோர் ஆணையாளர் நௌபீஸ் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க உன்னத சேவைகளை புகழ்ந்து பாராட்டி கருத்துரை நிகழ்த்தினர்.
அத்துடன் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் அனைவரினதும் சார்பில் கிளைகள் ரீதியாக நினைவுப் பரிசுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
தனது குறுகிய கால சேவைக் காலத்தில் நிறைவான சேவைகளை நிறைவேற்றிய திருப்தியுடன் விடைபெறுகிறேன் எனவும் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கும் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆணையாளர் நௌபீஸ் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
No comments