முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் சேகுவின் வகிபாகம்.
ஐந்தாவது தொடர்........
மு.கா தலைவர் அஷ்ரப்பின் செல்வாக்கை உடைக்கும் நோக்கில் 1998 காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியினால் சேகு இஸ்சடீனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அப்போது பாராளுமன்ற முதல் அமர்விலேயே அஷ்ரப்புக்கு எதிராக சேகுவால் வாசிக்கப்பட்ட கவிதை அதிகமாக பேசப்பட்ட ஒன்றாக இருந்ததுடன், சேகுவுக்கே அது விமர்சனத்தை உண்டுபண்ணியது.
அதே காலப்பகுதியில் அக்கரைப்பற்றில் பலயீனமாக இருந்த முஸ்லிம் காங்கிரசை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் இணைப்புச் செயலாளராக இருந்த அதாஉல்லாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தலைவர் அஷ்ரபினால் வழங்கப்பட்டது. சேகு பாராளுமன்றம் சென்றதன் பின்பு அவ்வாறு அதாஉல்லாஹ்வுக்கு வழங்கியதன் மூலம் அக்கரைப்பற்றில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தலாமென்று தலைவர் எதிர்பார்த்தார் ஆனால் தலைவர் மரணிக்கும்வரை அது நடைபெறவில்லை.
சேகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பின்பு மு.காங்கிரசின் கோட்டையாக இருந்த அக்கரைப்பற்று, சேகுவின் கோட்டையாக மாறியது. அங்கு மு.காங்கிரசுக்கு மூவாயிரம் வாக்குகளை பெறுவதும் கடினமாக இருந்தது.
நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம்களின் அரசியலானது முதன்முதலாக தனிநபர் அரசியலாக மாறியது. அதாவது கொள்கை அடிப்படையில் கட்சி என்ற ரீதியில் ஒன்றுபட்ட அக்கரைபற்று மக்கள் சேகு என்னும் தனிநபருக்கு பின்னால் சென்றனர். சேகுமீது அனுதாபப்பட்டதே இதற்கு காரணமாகும்.
ஆனாலும் அஸ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசுக்கு போட்டியாக அக்கரைப்பற்றை தவிர வேறு எங்கும் சேகுவால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.
அதாவது அக்கரைப்பற்றில் குறைந்தளவு வாக்குவங்கிகளைக்கொண்ட அதாஉல்லாஹ் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய நிலையில், அதிக செல்வாக்கினைக்கொண்ட சேகுவால் அவ்வாறு தெரிவாக முடியவில்லை. இது அக்கரைப்பற்றுக்கு வெளியே சேகுவினால் செல்வாக்கு செலுத்த முடியாமையை காண்பித்தது.
தலைவர் அஷ்ரப்பின் மரணத்துக்கு பின்பு சேகு அவர்கள் தனது முழு ஆதரவினையும் தலைவரின் மனைவி பேரியல் அஷ்ரபுக்கு வழங்கினார். அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவும் பதவிகளை அடைந்த பின்பு சேகு அரசியலில் சறுக்க ஆரம்பித்தார். இது அக்கரைபற்றில் அதாஉல்லாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.
அவ்வாறு படிப்படியாக அதாஉல்லாஹ்வின் பக்கம் அக்கரைப்பற்று மக்களின் ஆதரவு உயர ஆரம்பித்ததுடன் சேகுவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. இதனை 2004 பொது தேர்தலில் உணர்ந்துகொள்ள முடிந்தது.
அரசியல் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழமை. அதுபோல் தலைவர் அஷ்ரப்புக்கும், தவிசாளர் சேகுவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளானது கொள்கை முரண்பாடுகளாகும். அதனை நிவர்த்தி செய்வதற்கு கட்சிக்குள் எவரும் இருக்கவில்லை. மாறாக தலைவரிடம் கோள் மூட்டி பிரித்து வைப்பதிலேயே குறியாக இருந்தனர்.
சேகு வடகிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அங்கு நடைபெறுகின்ற சிறிய விடையங்களையெல்லாம் பெரிதுபடுத்தி தலைவரிடம் மூட்டி விடுகின்ற வேலையை சில உறுப்பினர்கள் செய்ததாக அப்போது கூறப்பட்டது.
சேகு முஸ்லிம் காங்கிரசைவிட்டு வெளியேற்றப்பட்டமை, 1994 ல் தலைவர் அஸ்ரப் அமைச்சர் பதவி ஏற்றமை. ஆகிய இரண்டு காரணங்களின் பின்பு முஸ்லிம் தேசியம் என்ற சமூக அரசியல் மங்கிப்போக ஆரம்பித்தது. அதன் பின்பு அபிவிருத்தி மற்றும் இலாப நோக்கிலான அரசியலே முதன்மை பெற்றது. இன்றைய இளைய சமூகத்தினர்களுக்கு சமூக அரசியல் பற்றிய எந்தவித அறிவும் இல்லை. எல்லோரும் அபிவிருத்தி அரசியல் பற்றித்தான் பேசுகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய முழுமையான வரலாறு எழுதப்படுகின்றபோது அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து 1992 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மு.கா வளர்ச்சியில் பிரதான பங்களிப்புச் செய்த சேகுவுக்கென்று தனி இடம் உள்ளது. அவைகள் எழுதப்படாதுவிட்டால் அது முழுமையான வரலாறாக கருத முடியாது.
28.11.2024 ம் திகதி சேகுவின் மரணம் மனதுக்கு துயரத்தை ஏற்படுத்தியது. அவரை எமது சமூகம் பயன்படுத்த தவறிவிட்டது. இறுதியாக 2012 இல் மதினாபுரம் சேகுமலை சோலையில் ஒரு நாள் முழுவதும் அவருடனேயே தங்கியிருந்தோம். உடன் நளீம் மாஸ்டரும் இருந்தார். இது மறக்கமுடியாதது.
சேகுவின் பாவங்களை இறைவன் மன்னிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வதோடு இந்த தொடரினை நிறைவு செய்கிறேன்.
இந்த கட்டுரை தொடரினை ஆரம்பித்தபின்பு வேறு கட்டுரைகள் எழுதவேண்டி இருந்ததனாலும், நேரம் போதாமை காரணமாகவும் தொடர்ந்து எழுத முடியவில்லை. அத்துடன் இந்த தொடரினை நீட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை. அதனால் முடியுமானவரை சில முக்கிய கருத்துக்களை பதிவு செய்து சுருக்கமாக நிறைவு செய்துள்ளேன். அத்துடன் இந்த தொடரில் எனது எழுத்துக்கள் மூலமாக இரண்டு தலைவர்களுக்கும் எந்தவித விமர்சனமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments