புத்தளம் - உடப்பு ஓவியர் க.முத்துக்குமரன் ஆசிரியர்
(உடப்பு க.மகாதேவன்)
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய உள் வீதியின் மேல் “சீலிங் “பகுதியில் ஆலய வரலாற்று சம்பந்தமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றது.
உடப்பு ஆண்டிமுனை பகுதியில் வசித்து வரும் ஓவியரும், ஆசிரியருமான திரு. கதிரேசன் முத்துக்குமரன் அவர்கள் இந்த வரலாற்று ஓவியத்தை வரைந்து வருகின்றார். உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமை புரிந்து வரும் இவர், பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கும், கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கும் சித்திர பாடத்தை கற்பித்து வருகின்றார்.
ஆரம்ப காலத்தில் புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் தனது முதல் நியமனத்தைப் பெற்று, அங்கு பத்து வருடத்துக்கு மேலாக கடமையாற்றி பின்னர் ,உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றமாகி வந்து தற்போது இங்கேயே கல்வி புகட்டி வருகின்றார். இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்.
புத்தளம் மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்டத்திலும் உள்ள பல இந்து ஆலயங்களில், தமது தலைமையில் ஏனைய சகாக்களுடன் இணந்து வர்ண ஓவியம் வரைதலுடன் வர்ணம் பூசுவதிலும் ஈடுபட்டு வருகின்றார்.
அத்துடன் இவர் ஒரு கதாசிரியர், நாடக நடிகர்,ஓவியர், பாடகர் சிறந்த ஒப்பனையாளர், திரைச்சீலை அலங்கரிப்பவர் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்குகின்றார். ஆலயங்கள் பல வற்றில் ஓவியங்கள் வரைந்ததற்காக இவருக்கு ஆலயங்கள் சார்பாக பல விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
No comments