முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் சேகுவின் வகிபாகம்.
இரண்டாவது தொடர்........
தென்கிழக்கு முஸ்லிம் மாகான கோரிக்கையும், ஈழப் பிரகடனத்துக்கு எதிராக சபை வெளிநடப்பும்.
1981.09.21 இல் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அங்குராப்பணம் செய்யப்பட்டதற்கு பின்பு தலைவரினால் பத்திரிகைகளில் சமூகம் சார்ந்து கட்டுரை எழுதுவதை தவிர, வேறு எந்தவித செயற்பாடுகளும் இருந்ததில்லை.
தேர்தல் திணைக்களத்தில் முஸ்லிம் காங்கிரசை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் 1986 இல் கட்சியின் முதலாவது மாநாட்டை ஆறாவது மாநாடு என்று குறிப்பிட்டு அதற்கான அனைத்து வேலைகளையும் சேகு இஸ்சடீன் மேற்கொண்டார். அவருக்கு துணையாக அன்றைய சட்டக்கல்லூரி மாணவனும், இன்றைய கட்சியின் செயலாளருமான நிசாம் காரியப்பர் செயற்பட்டார்.
1986.11.29 கொழும்பு பாஷாவிலாவில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டில் தலைவர் அஷ்ரபினால் வாசிக்கப்பட்ட கொள்கைப்பிரகடன உரையானது சேகுவால் தயாரிக்கப்பட்டதென்று அவரே கூறியிருந்தார்.
1987 இறுதியில் இன்றைய மு.கா தலைவர் ரவுப் ஹக்கீமின் மாமனாரான குத்தூஸ் ஹாஜியாரின் காணிவெல் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழர்களுக்கு “வடகிழக்கு மாகாணம்” என்ற வாசகம் இருப்பதுபோன்று முஸ்லிம்களுக்கு “தென்கிழக்கு மாகாணம்” என்ற நிலத்தொடர்பற்ற மாகாணம் என்ற கருத்தியலை முதன்முதலாக சேகு அவர்கள் முன்வைத்தார்.
1988 இல் வடகிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதில் முஸ்லிம் சமூகம் சார்பில் முஸ்லிம் காங்கிரசை களமிறக்க இந்தியா அழுத்தம் வழங்கியபோது விடுதலை புலிகளின் மரண அச்சுறுத்தல் காரணமாக தேர்தலில் போட்டியிடுவதற்கு தலைவர் அஷ்ரப் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சேகு இஸ்சடீனின் விடாப்பிடியினால் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு 17 ஆசனங்களை மு.கா பெற்றுக் கொண்டது.
வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் அன்று மு.கா போட்டியிட மறுப்பு தெரிவித்திருந்தால், தேர்தல் நடாத்தியிருக்க முடியாது. இந்தியாவின் முயற்சி தோல்வியடைந்திருக்கும். அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.
கட்சித் தலைவர்களாக திரு. பத்மநாபா, எம்.எச்.எம். அஸ்ரப் ஆகியோர் இருக்கத்தக்கதாக இந்திய அமைதிப்படையின் பாதுகாப்புடன் திரு. வரதராஜ பெருமாள் தலைமையிலான EPRLF இயக்கம் வடகிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்ததுடன், சேகு இஸ்சடீன் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி வரிசையில் செயற்பட்டது.
1990 இல் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தலைமையிலான வடகிழக்கு மாகாண சபை அமர்வில் “ஈழப் பிரகடனம்” செய்தபோது அதனை எதிர்க்கட்சி தலைவர் சேகு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு சபையிலிருந்து சேகு தலமையலான முஸ்லிம் காங்கிரஸ் அணி வெளிநடப்பு செய்தது.
முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் சாதனை என்று பதியப்பட்டுள்ள 12.5% வெட்டுப் புள்ளியை 5% மாக குறைக்கப்பட்டமை விடயத்தில் சேகு இஸ்சடீனுக்கும் பெரும் பங்குள்ளது. ஜனாதிபதி பிரேமதாசாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தலைவருடன் சேகுவும் இருந்தார்.
1989 இல் நடைபெற்ற பொது தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தலைவர் அஷ்ரப் முதலாம் இலக்கத்திலும், தவிசாளர் சேகு இஸ்சடீன் இரண்டாம் இலக்கத்திலும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டனர். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனம் கிடைத்ததன் காரணமாக சேகு இஸ்சடீனுக்கு பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.
தொடரும்........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments