இதில் படிப்பினைகள் உள்ளது. இதனை நாங்கள் மறந்துவிடக் கூடாது.
அம்பாறை ஹோட்டல் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமிட்ட இனக்கலவரமானது கண்டி மாவட்டம் முழுவதும் அரங்கேற்றப்பட்டு அது நாடு முழுக்க தாக்கம் செலுத்தியது.
2018 மார்ச் மூன்று தொடக்கம் எட்டாம் திகதி வரைக்கும் இந்த நாட்டில் எந்தவொரு சிவில் நிருவாகமோ, அரச இயந்திரமோ இயங்கவில்லை.
மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு படையினர்கள் முகாமை விட்டு வெளியேறாமல் முகாமுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார்கள். அவர்கள் இருந்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகள் நடைபெற்றபோது அங்கிருந்த பாதுகாப்பு படையினர்கள் வேறு இடங்களுக்கு பின்வாங்கிய சம்பவங்களும் நடைபெற்றது.
இனவாத காடையர்கள் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அரங்கேற்றியபோது குறித்த தினங்களில் நாங்கள் தற்போது கடுமையாக விமர்சிக்கின்ற முஸ்லிம் தலைவர்களைத் தவிர, முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதற்கோ, வண்முறையை கண்டிப்பதற்கோ, தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது வேறு உதவிகள் செய்வதற்கோ எந்தவொரு சிங்கள தலைவர்களோ, அமைப்புக்களோ முன்வரவில்லை.
குறிப்பாக எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்கின்ற JVP யினர்கூட முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்கவுமில்லை, வன்முறைகளை கண்டிக்க முன்வரவுமில்லை.
இந்தநிலையில் இலங்கை கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார அவர்கள் மாத்திரமே பகிரங்கமாக முஸ்லிம்களுக்காக முதன்முறையாக துணிந்து குரல்கொடுத்தார். அதன்பின்புதான் ஏனைய சிங்கள தலைவர்கள் வாய் திறந்தனர்.
2018 பெப்ரவரி 20ஆம் திகதி கண்டியின் தெல்தெனிய பகுதியில் விபத்தின் காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் உயிரிழந்தான். அவனது உடலை காட்சிபடுத்தி சிங்கள இளைஞ்சர்கள் உணர்ச்சியூட்டப்பட்டு முஸ்லிகளுக்கெதிராக களம் இறக்கப்பட்டார்கள்.
அதனை தொடர்ந்து முஸ்லிம்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டு பின்பு எரியூட்டப்பட்டது. பள்ளிவாசலினுள் புகுந்த காடையர்கள் அங்கிருந்த குரான்களை எரித்ததுடன், பள்ளிவாசலையும் சேதப்படுத்தினார்கள்.
அப்போதைய கணக்கெடுப்பின்படி 445 வீடுகளும், கடைகளும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும், இதன் பெறுமதி எண்ணூற்றி எண்பத்தைந்து கோடி ரூபாய்கள் என்றும், 28 பேர்கள் காயமடைந்து இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு செய்தது.ஆனால் இதனைவிட அதிகம் என்று கூறப்படுகின்றது.
எனவே சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் திட்டமிட்டும் ஏற்படலாம். அல்லது தற்செயலாகவும் ஏற்படலாம். முஸ்லிம்களாகிய நாங்கள் அதிலிருந்து எந்தவித படிப்பினைகளையும் பெறாமலும், எதிர்கால பாதுகாப்பு பற்றி சிந்திக்காமலும், அபிவிருத்தி என்னும் மாயையில் மாத்திரம் சிக்குண்டு வாழ்ந்து வருவதுதான் பலயீனமான ஒன்றாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments