சாய்ந்தமருது அல்ஹிலாலில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் சின்னம் சூட்டும் நிகழ்வும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீமை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் பிரதியதிபர் ஏ.பி. ஷெறோன் டில்ராஸ் ஏற்பாட்டில் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத் மற்றும் பாடசாலையின் உதவி அதிபர் எம்.எச்.லாபிர், பிரதி அதிபர்களான எம்.சி.என். றிப்கா அன்சார், எம்.எச். நுஸ்ரத் பேகம், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை கல்வி வலயத்தை அகில இலங்கை ரீதியாக இரண்டாம் நிலைக்கு இட்டுச் சென்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீமை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வானது பிரதேசத்திலேயே முதல் தடவையாக சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் மற்றும் அதிதிகள் பாடசாலை உதவி, பிரதி அதிபர்கள் என அனைவரும் புடைசூழ பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிப் பாராட்டிக் கௌரவித்தனர்.
அத்தோடு, மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்கள் ஆகியோருக்கு பிரதம அதிதி மற்றும் அதிதிகளால் சின்னம் சூட்டி, அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
பாடசாலை பேண்ட் வாத்திய மாணவர்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு, அதிதிகள் வரவேற்கப்பட்ட அதே வேளை, பாடசாலையினால் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துல் நஜீமுக்கு வரவேற்பு பா எழுதப்பட்டு, அதனை பாடசாலை ஆசிரியைகளினால் நிகழ்வில் பாடப்பட்டு, சபையோர் முன்னிலையில் அவரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments