கனடா சம்யுக்தா நிறுவனம், கவிஞர் "புத்தளம் மரிக்காருக்கு" சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பு.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
கனடாவை மையமாகக் கொண்டு இயங்கும் சம்யுக்தா நிறுவனம் சர்வதேச ரீதியில் நடாத்திய, கலைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்று, கவிஞர் புத்தளம் எஸ்.ஏ.சீ.பீ.மரிக்கார் 'சிறந்த பாடலாசிரியர்-2024' என்ற விருதை பெற்றுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழா அண்மையில் (24) கனடா டொரொன்டோ நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
குறித்த இந்த நிறுவனம் சர்வதேச ரீதியில், "தெரிவு, பொதுமக்கள் வாக்களிப்பு, மீள் தெரிவு" எனும் மூன்று நிபந்தனை சுற்றுக்களை முன்வைத்து இந்த போட்டியை நடாத்தி இருந்தது.
இப்போட்டியின் போது, கலைஞர்களின் குறித்த ஆண்டில் வெளியான படைப்புகள் கருத்தில் கொள்ளப்பட்டதோடு, போட்டியின் ஓர் அங்கமாக பொதுமக்கள் வாக்களிப்பிலும் அங்கீகாரத்தை பெற வேண்டியிருந்தது.
குறும்படம், இயக்கம், நடிப்பு, படத்தொகுப்பு என பல்வேறு துறைகளில் நடாத்தப்பட்ட இப்போட்டி நிகழ்ச்சியில் சுமார் 138 நாடுகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை புத்தளம் மரிக்கார் சார்பில், கனடாவில் வசிக்கும் அவரது நண்பர் ஏ.ஆர்.எம்.பர்ஸான் பெற்றுக்கொண்டார்.
இந்த வெற்றி தொடர்பாக கவிஞர் புத்தளம் மரிக்கார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உங்கள் அமோக ஆதரவினாலும், இந்த ஆண்டில் வெளியான எனது படைப்புகளை கருத்திற்கொண்டும், "சிறந்த பாடலாசிரியர்" (Best Lyricist) 2024 விருதுக்குரிய வெற்றியாளராக "புத்தளம் மரிக்கார்" எனும் பெயர் வெளியிடப்பட்டிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இவ்விருதுக்காக, உலகம் முழுதும் இருந்து எனக்காக வாக்களித்த நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, குறிப்பாக புத்தளம் உறவுகள், புத்தளம் ஒன்லைன் குழுமம், எஸ்.எல்.பொலிடிக்ஸ் குழுமம், யூ.கே மற்றும் கத்தார் நண்பர்கள் வட்டம், அலுவலக நண்பர்கள், அறியாத பலர் உட்பட அனைவரையும் அன்புடன் நினைவுகூருகின்றேன்.
விஷேடமாக குறித்த நிகழ்விற்கு என்னால் நேரடியாக சென்று சமூகமளிக்கும் சாத்தியம் இல்லாத நிலையில், எனக்காக குறித்த தினத்தை முழுமையாக ஒதுக்கி, அங்கே என் சார்பில் நிகழ்வில் கலந்துகொண்டு விருதைப்பெற்று கையளித்த ஏ.ஆர்.எம்.பர்ஸான் அவர்களது இன்றியமையா பங்களிப்பிற்கு இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இலக்கியப்பயணத்தில் இலங்கைக்கு வெளியே இது என் இரண்டாவது அங்கீகாரமாகும்.
இருப்பினும், 'கனடாவில் புத்தளத்தின் சப்தம்' என்பது அதனிலும் மேலான சந்தோசம். வாக்களித்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் என தெரிவித்துள்ளார்.
No comments