Breaking News

மு.கா உயர்பீடத்திலிருந்து நீக்கப்பட்ட பிரதித்தலைவர் ஹரீஸ் : விளக்கம் அனுப்ப கோருகிறார் நிஸாம் காரியப்பர்.

நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி அக்கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


அந்த கடிதத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் போது உங்கள் நடத்தை குறித்து இந்த விஷயத்தை நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் மரம் சின்னத்தில் போட்டியிட ஏகமனதாகத் தீர்மானித்தது உங்களுக்குத் தெரியும். கட்சியின் பிரதித் தலைவர் என்ற வகையில், கட்சியின் வெற்றிக்காக நீங்கள் தீவிரமாக ஆதரிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்துக்கான வேட்புமனுவை மரம் சின்னத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தது.


எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் திகதி கல்முனையில் பொதுக் கூட்டங்களை நடத்திய நீங்கள், கட்சியையும் அதன் தலைமையையும் தாக்கி உரைகளை நிகழ்த்தினீர்கள். இந்த அறிக்கைகள் மாவட்டத்திலும் நாடளாவிய ரீதியிலும் கட்சியின் பிரச்சாரத்திற்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது, உங்கள் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு, எதிர்மறையான தாக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த நடத்தை கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறுவதாகும்.


இந்த நடவடிக்கைகளின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கட்சி உயர்பீடத்தில் இருந்து உங்களின் உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் செயல்களுக்கு ஏதேனும் சரியான மற்றும் நியாயமான காரணங்கள் இருந்தால், நீங்கள் விளக்கத்தை வழங்கலாம். உங்கள் பதில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஒரு வாரத்திற்குள் என்னை வந்தடைவதை உறுதி செய்யவும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.நிசாம் காரியப்பர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இது போன்று முன்னரும் பல தடவைகள் கடிதம் அனுப்புவதும், மீள அவரை இணைத்து கொள்வதும் இவர்களுக்கு வாடிக்கையான விடயம் என பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகிறார்கள். மட்டுமின்றி திகாமடுல்ல மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை போட்டியிட கட்சி அனுமதிக்காதமையால் அவர் எந்த கட்சியிலும் போட்டியிடாது அமைதிகாத்து வந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் திசைகாட்டி, சிலிண்டர் போன்ற பல கட்சிகளுக்கும் ஆதரவளிததுடன் கல்முனை தொகுதியில் மு.கா தோல்வியை சந்தித்திருந்ததும், திகாமடுல்ல வில் மரம் கணிசமான வாக்கு சரிவை சந்தித்திருந்தமையும், நாடு தழுவிய அளவில் மு.காவுக்கு இது பாரிய வாக்கு வீழ்ச்சியை உருவாக்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.











No comments

note