Breaking News

கண்டியில் ரவூப் ஹக்கீமை தோல்வியடைய செய்வதில் தோல்விகண்டவர்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டி மாவட்டத்தில் தோல்வியடைவார் என்ற பிரச்சாரம் மேலோங்கியிருந்தது. அவருக்கு எதிராக சமூகவலைத் தளங்களில் பரவலான பிரச்சாரம் மேலோங்கியிருந்ததனால் அது தேர்தல் களத்தில் பாரிய தாக்கம் செலுத்தியது.  


2001 இல் தலைமைத்துவ போராட்டத்தில் எனக்கும் பங்கு இருந்ததனால் அவர் தோல்வியடைவதில் பங்காளியாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக மு.கா தலைவரை விமர்சனம் செய்வதிலிருந்து நான் முற்றாக விலகியிருந்தேன். 


நாட்டில் ஏற்பட்ட அனுரவுக்கு ஆதரவான பாரிய அலை கண்டி மாவட்டத்திலும் மேலோங்கி இருந்தது. இந்த அலையை தாண்டி வெற்றிபெறுவதென்பது பாரியதொரு சவாலாகும். 


களத்தில் NPP யினர் எதிரிகளாக இருந்த நிலையில், சுற்றிவர துரோகிகளை சமாளிப்பதில்தான் பாரிய சிக்கலை ரவூப் ஹக்கீம் எதிர்கொண்டார்.


அவர் போட்டியிட்ட SJP அணியில் தங்களை ரவூப் ஹக்கீம் முந்திவிடக்கூடாது என்பதில் சக வேட்பாளர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து காய் நகர்த்தி குழிபறித்தனர்.  


இதற்கிடையில் ரவுப் ஹக்கீமை தோற்கடிக்கும் நோக்கில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், முன்னாள் அக்குரணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திகார் இமாமுதீன் ஆகியோர்களின் தலைமையில் பலமான சுயேற்சை குழு களமிறக்கப்பட்டு இவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது. 


நீண்டகாலமாக இருந்துவருகின்ற அக்குரணை வெள்ள அனர்த்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு முழுப் பழியும் இவர்மீது சுமத்தப்பட்டதனால், அது அக்குரணை வாக்கு வங்கியில் பின்னடைவு ஏற்பட்டது.   


அத்துடன் இவர் கண்டி மாவட்டத்தில் ஒன்றும் செய்யவில்லை மாறாக கிழக்கு மக்களுக்குத்தான் அபிவிருத்தி செய்தார் என்ற பிரச்சாரம் மேலோங்கியது.  


மேலும், ரவூப் ஹக்கீமை தோல்வியடையச் செய்யும் நோக்கில் தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்த றஸ்மின் மௌலவியின் பிரச்சாரம் நாடுதழுவிய ரீதியில் சூடுபிடித்திருந்தது.


அவைகள் ஒருபுறமிருக்க, தலைவரை தோல்வியடைய செய்வதற்காக முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்து ஒரு குழு செயற்பட்டு வந்தது. 


எத்தனையோ சிங்கள, தமிழ் பெருந்தலைவர்கள் அனுரவின் அலையில் அடித்துச் செல்லப்பட்டு தோல்வியடைந்த நிலையில், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான அத்தனை சூழ்ச்சிகளுக்கு மத்தியில் SJP அணியின் முதன்மை வெற்றியானது அவரது எதிரிகளுக்கு ஏற்பட்ட பாரிய தோல்வியாகும். 


அது மட்டுமல்லாது, எத்தனை சூழ்சிகளை மேற்கொண்டாலும் கண்டி மாவட்ட மக்கள் மனதிலிருந்து அவரை பிரிக்க முடியாதென்பதனை தேர்தல் பெறுபேறுகள் காண்பித்துள்ளது.    


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note