Breaking News

புத்தளம் நகரின் துரித அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஆளும் அரசாங்கத்துக்கே உள்ளூராட்சி மன்றங்களை யும் பெற்றுக்கொடுப்போம்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் நகரின் துரித அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஆளும் அரசாங்கத்துக்கே வாக்களித்து உள்ளூராட்சி மன்றங்களையும் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எச்.எம்.ரஸ்மி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை நாட்டின் ஆளும் அரசாங்கம், அதாவது ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இருக்கும் அதே கட்சிக்கு மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளை வெற்றி பெறச்செய்வதால் அந்தந்த நகரங்களும் கிராமங்களும் மிக விரைவாக அபிவிருத்தி அடையும்.


கட்சி வெறியை புறந்தள்ளி, நமது சமூகம் நமது நகரம் அல்லது நமது கிராமம் முன்னேற வேண்டும் என்ற தூய உள்ளம் இருக்குமாயின்.  துரித அபிவிருத்தி கிடைக்கப்பெற வேண்டுமென்று கருதினால், நாட்டின் ஆளும் அரசாங்கத்துக்கே உள்ளூராட்சி மன்றங்களையும் வழங்க வேண்டும்.


வெற்றிபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிறைந்த அபிவிருத்திகளை பெற்றுத்தருவார்கள்.


சிறந்த ஒத்திசைவும், தரமான அதிகாரமும் இருக்கும். உள்ளூர் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள் வழங்கப்படும். எந்த திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அரச நிறுவனங்களும், நிர்வாகத்தினரும் ஒத்திசைந்து இயங்குவர். நாட்டுக்கு  ஜனாதிபதி போன்று ஊருக்கு நகர தலைமை மிகச்சிறந்த அதிகாரத்துடன் இருக்கும்.


மத்திய அரசாங்கத்தினதும், மாகாண மட்டத்தினதும் ஒருமித்த கருத்துடன் தேசிய திட்டங்கள் மிக விரைவாக உள்ளூருக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.


மிகப்பாரிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை இலகுவாக நடைமுறைப்படுத்தலாம். வேலைவாய்ப்புகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.


உட்கட்டமைப்பு வசதிகள் (பாதைகள், போக்குவரத்து வசதிகள், நிரந்தர வடிகால் திட்டங்கள், வீட்டுத்திட்டங்கள், வெள்ளத்தடுப்பு விடயங்கள், சுகாதார வேலைத்திட்டங்கள்) போன்ற பாரிய திட்டங்கள் மத்திய அரசின் ஒதுக்கீட்டினூடாக மிக விரைவாக மேட்கொள்ளப்படும்.


நிதி ஒதுக்கீடுகள் மிக விரைவாக அங்கீகரிக்கப்படும். பாரிய திட்டங்கள் மிக விரைவாக அனுமதி வழங்கப்படும்.


தேசிய மற்றும் உள்ளூர் திட்டங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். எதிர்ப்புகள் இல்லாமல் இலகுவாக நடைமுறைப்படுத்தப்படும்.


மிகமுக்கியமாக, மத்திய அரசாங்கம் தனது குழந்தையை போன்று பராமரித்துக்கொள்ளும்.


இதற்கு மாற்றமாக நாம் பிறிதொரு கட்சியை வெற்றிபெற செய்வதால் நிச்சயமாக மேற்கூறிய அனைத்தையும் இழந்து ஒரு டம்மி (Dummy )மன்றமாகவே இயங்கும். 


வெறும் கூளம் அள்ளுவதும், அவ்வப்போது சில படம் காட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும், அங்குமிங்குமாக சில நிகழ்ச்சிகளில் கௌரவ அதிதிகளாக படம் காட்டுவதும் மாத்திரமே இருக்கும்.


எனவே மக்கள் எவ்வாறு ஜனாதிபதியையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாக இணைந்து பெற்றீர்களோ அவ்வாறே நகர சபை, மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளையும் ஒற்றுமையாக ஆளும் கட்சிக்கே வழங்கி இழந்துபோன உரிமைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்வோம்.


அதே போன்று அரசியல்வாதிகளும் அவரவரது சுயநலன்களை ஓரமாக வைத்து, தமது மக்களின் மீது உண்மையான அன்பிருந்தால், ஆளும் தரப்பை வெற்றிபெற உதவி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.




No comments

note