Breaking News

கல்முனை தொகுதியை எந்தக் கட்சி கைபற்றும் ? இன்றைய கள நிலவரம்.

என்றுமில்லாதவாறு இந்த தேர்தலில் கல்முனை தொகுதியில் பலமுனை போட்டி நிலவுகிறது. கல்முனை தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 80,760 . இதில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக அளிக்கப்பட வாக்குகள் 58,150. இது 72.35 வீதமாகும். 


ஆனால் இந்த தேர்தலில் கல்முனை தொகுதியில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதனால், வாக்களிப்பு வீதம் ஜனாதிபதி தேர்தலைவிட அதிகரிக்கும். குறிப்பாக தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலைவிட பொது தேர்தலில் அதிகம் ஆர்வம் காட்டுவது வழமை.  


கடந்த 2020 பொது தேர்தலில் மும்முனை போட்டிகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் (SJB) பெற்ற வாக்குகள் 20,011, தேசிய காங்கிரஸ் 10,401, ACMC 6,380 மற்றும் தமிழ் மகாசபையும், தமிழரசு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள் 13,240. 


கடந்த 2020 பொது தேர்தலில் SLMC, தேசிய காங்கிரஸ், ACMC மற்றும் தமிழ் தரப்பு ஆகியவற்றுக்கிடையிலேயே போட்டிகள் காணப்பட்டது. 


ஆனால் இந்த தேர்தலில் NPP புதிதாக போட்டியாக உருவெடுத்துள்ளதுடன், ACMC கடந்த தேர்தலைவிட சற்று அதிகமான வாக்குகளை இந்த தேர்தலில் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. NPP, ACMC ஆகியவற்றுக்கு அதிகரிக்கும் வாக்குகள் SLMC, அதாஉல்லாஹ்வின் வாக்குகளில் சரிவை ஏற்படுத்தும்.


கல்முனை நகரம், பாண்டிருப்பு, நீலாவனை, மனச்சேனை ஆகியன  கல்முனை தொகுதியின் தமிழர் பிரதேசங்களாகும். இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளராக சுமந்திரனின் விசுவாசி கல்முனை பிரதேசத்தில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். இவர் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தக் கோரும் போராட்டத்தில் முன்னிலை வகித்ததனால் பலமான வேட்பாளராக காணப்படுகின்றார். 


ஜனாதிபதி தேர்தலில் கல்முனை தொகுதியில் அனுரகுமார திசாநாயக்காவுக்கு தமிழர்கள் ஆதவளித்தது போன்ற நிலை இந்த தேர்தலில் இல்லை.  


கல்முனை தொகுதியின் அதிக வாக்குகளைக் கொண்ட சாய்ந்தமருதில் நான்கு பக்க பலமான போட்டி நிலவுகிறது. அத்துடன் கடந்த காலங்களில் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய ஊர்களில் உள்ள ஹரீஸ் எம்பிக்கு சார்பான முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளும் இதுவரையில் பல பக்கமும் சிதைந்து காணப்படுகின்றது.  


கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு பலமான சவால்கள் இருந்தாலும், முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகள் அனைவரும் ஒன்றுபடாமல் வெவ்வேறு அணிகளாக உள்ளதனால், தனிப்பட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் முஸ்லிம் காங்கிரசை தோற்கடிக்க முடியாது. 


ஆனால் கல்முனை தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் நான்கு பக்கமாக பிரிந்து உள்ள நிலையில், தமிழர் வாக்குகள் ஒரே சக்தியாக இருப்பதனால் முஸ்லிம்களின் தலைநகர் என்று அழைக்கப்படுகின்ற கல்முனை தொகுதியை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றுவதுடன், முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாம் இடத்துக்கு செல்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.  


இது நூறுவீதம் உறுதியான கணிப்பு அல்ல. தேர்தல் நெருங்கும்போது களநிலவரம் மாறுபடலாம். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note