Breaking News

நாவற்காடு றோ.க.த. வித்தியாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா வோடு கூடிய பாராட்டு வைபவம்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் கல்வி வலயத்தில் கல்பிட்டி கோட்டத்தில் அமைந்துள்ள நாவற்காடு றோ.க.த. வித்தியாலயத்தில் க.பொ.த. (சா.த.) சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு, இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கான பிரியாவிடை, புதிதாகப் பதவியேற்றுள்ள பணிப்பாளருக்கான வரவேற்பு ஆகிய முப்பெரும் வைபவங்கள் அண்மையில் (09) பாடசாலையில் இடம்பெற்றன.


நூற்றாண்டு கடந்து பயணிக்கும் நாவற்காடு  வித்தியாலயம், அதிபர் பீ. ஜெனட்ராஜ் இப்பாடசாலையைப் பொறுப்பேற்ற பின்னர், பல அடைவு மட்டங்களையும் சாதனைகளையும் நிகழ்த்திவருகின்றது. பெற்றோர், பழையமாணவர்கள் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இதற்குப் பிரதான காரணியாகும். 


தற்போதைய அதிபர் பதவியேற்ற ஆரம்பத்தில், அவர் மேற்கொண்ட அயராத முயற்சிகளின் பலனாக பூச்சிய மட்ட அடைவு நிலையில் இருந்த ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பெறுபேறு கோட்ட மட்டத்தில் மட்டுமன்றி வலய மட்டத்திலும் முதலிடம் பெறும் அளவுக்கு முன்னேறியது. 


அன்று இப்பரீட்சையில் சித்தியடைந்த அதே மாணவர்கள் இம்முறை க.பொ.த. (சா.த.)  பரீட்சைக்குத் தோற்றி  3 / 6 என்ற ரீதியில் கோட்ட, வலய மட்டங்களில் முதலிடம் பெற்றுள்ளனர். 


குறித்த இந்நிகழ்வில் இம்மாணவர்கள், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் கெளரவிக்கப்பட்டனர். 


ஆரம்பம் முதல் இன்று வரை அவர்களுக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


இவ்வைபவத்தில், கல்பிட்டி கோட்டப்பணிப்பாளராகக் கடமையாற்றி தற்போது புத்தளம் கல்வி வலயத்தில் திட்டமிடல் பிரிவில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் என்.எம்.ஆர்.தீப்தி பெர்னாண்டோ, புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பிரிவில் அதிபராகக் கடமையாற்றி, இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் (SLEAS) உள்வாங்கப்பட்டு, பதவி உயர்வுபெற்று கல்பிட்டிக் கோட்டப்பணிப்பாளராகக் கடமையேற்றுள்ள ஏ.எம். ஜவாத் ஆகியோருக்கும் கெளரவமளிக்கப்பட்டமை மேலும் நிகழ்ச்சியை மெருகூட்டியது. 


ஆசியுரை வழங்கிய தேத்தாப்பளை உதவிப் பங்குத் தந்தை அருட் பணி ஸ்டெனி, ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப்பிரிவு பாட இணைப்பாளர் வீ.அருணாகரன், மனைப்பொருளியல் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜீ.விஜயலக்சுமி, புத்தளம் பில்லர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள், பழைய மாணவர் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மாணவர் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.




















No comments

note