Breaking News

ரவூப் ஹக்கீமுக்கு எதிரான தொடர் விமர்சனமும், மக்களின் மறதியும்.

அரசியலில் விடுகின்ற தவறுகளுக்காக அவ்வப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை விமர்சித்திருந்தேன். ஆனாலும் அவர் தரப்பில் உள்ள சில நியாயங்களை அவரது ஊடகம் வெளிப்படுத்தவில்லை. 


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர் தரப்பில் இருந்துகொண்டு இருபதாவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் அவரது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே எதிர் தரப்பில் இருந்துகொண்டு அரசுக்கு சார்பாக செயற்பட்டு இருபதுக்கு ஆதரவளித்தனர்.  


முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்டபோது மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்கு எதிராக பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் குரல் கொடுத்ததோடு களத்தில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டார். ஆனால் அவரது எம்பிக்கள் ஜனாஸா எரிக்கப்படுகின்றபோது கோட்டா அரசோடு தேனிலவு கொண்டாடினார்கள். 


அவ்வாறு தேனிலவு கொண்டாடிய எம்பிக்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பாரியளவான எதிர்ப்பலைகள் இருந்தன. அவர்களது சொந்த முகநூளில் ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முடியாதவாறு கெட்ட வார்த்தைகளினால் விமர்சிக்கப்பட்டார்கள். 


அன்றைய சூழ்நிலையில் இவர்களை கட்சியை விட்டு நீக்கும்படி மு.கா தலைவருக்கு பல மட்டங்களிலிருந்தும் அழுத்தங்கள் இருந்தது. ஆனால் அவர் அதனை செய்யவில்லை மாறாக மன்னிப்பு வழங்கியிருந்தார்.  


அவ்வாறு மன்னிப்பு வழங்கியதனை எதிர்த்து மு.கா தலைவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது.    


மன்னிப்பு வழங்கியதனை விமர்சித்தவர்கள் பின்பு ஓய்ந்துவிட்டனர். ஆனால் யாருக்கு மன்னிப்பு வழங்கினாரோ அந்த தரப்பினரே தொடர்ந்து மு.கா தலைவரை விமர்சிப்பதனை பார்க்கின்றபோது அதன் உள்நோக்கம் என்னவென்று புரிகிறது. அதனை பின்னர் ஆராய்வோம். 


அத்துடன் மன்னிப்பை பெற்றவர்கள் திருந்தவில்லை. எந்தத் தவறுக்காக மன்னிப்பு வழங்கினாரோ, அதே தவறை மன்னிப்புக்கு பின்பு மீண்டும் செய்தனர். அதாவது கோட்டாவுடன் தேனிலவு கொண்டாடியவர்கள் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் மீண்டும் ரணிலுடன் தேனிலவு கொண்டாடினார்கள். 


இங்கே புரிதல் என்னவென்றால் கட்சிக் கட்டுக்கோப்பு, கொள்கை, கூட்டுப்பொறுப்பு, தலைமைத்துவக் கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பது நன்றாகப் புரிகிறது.


2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் கோட்டா மற்றும் ராஜபக்சாக்களை பயங்கர இனவாதிகளாக காண்பித்துத்தான் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றனர். வெற்றிபெற்றதன் பின்பு அதே கோட்டா மற்றும் ராஜபக்சாக்களுடன் தேனிலவு கொண்டாடினர். இது எவ்வாறான அரசியல் என்பதைவிட மக்களின் மறதியில் உள்ள அதீத நம்பிக்கைதான் இதற்கு முழுக் காரணமாகும்.      


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note