பாராளுமன்றத்துக்கு தகுதியானவர்கள் யார் ? மக்களின் பலயீனமென்ன ?
நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமூகத்திலிருந்து பலவகையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் பிரதேச சபை உறுப்பினருக்கு தகுதியற்றவர்களும் அடங்கும்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் அல்லது பொருத்தமானவர் யார் என்று தீர்மானிப்பதில்தான் அனைத்தும் தங்கியுள்ளது. ஏனெனில் இவர்களால்தான் சமூகத்துக்கு பெருமையும், இழுக்கும் ஏற்படும்.
கடந்தகாலங்களில் உறுப்பினர்களை தெரிவுசெய்வதில் மக்கள் தவறுகள் விட்டதன் காரணமாக கைசேதப்பட்டதனை கண்டுள்ளோம்.
அதாவது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் என்று நன்றாகத் தெரிந்திருந்தும் பணத்துக்காகவும், உலர் உணவுப் பொதிகளுக்காகவும், ஊருக்கு எம்பி வேண்டுமென்ற பிரதேசவாத நோக்கிலும் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். அதன் விளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தேசியரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தியது.
இங்கே தகுதி என்னும்போது மக்களது பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்களாகவும், சாதாரண மக்களினால் இலகுவில் சந்திக்கக்கூடியவராகவும் இருத்தல் வேண்டுமேதவிர, தொலைபேசியை அணைத்துவிட்டு கொழும்பில் உறங்குகின்றவர்களாகவும், கொந்தராத்துக்காரர்களுடன் மாத்திரம் தொடர்புகளை பேணுபவர்களாகவும் இருத்தல் கூடாது.
அத்துடன் நாட்டின் சட்டங்கள், அரசியல் யாப்புக்கள் பற்றிய போதிய அறிவு இருப்பதுடன், மக்களது பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்புபவராகவும், ஆட்சியாளர்களிடம் கேள்விகள் கேட்கின்ற தைரியமும், அடுத்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் வழங்குகின்ற அறிவு, ஆற்றல் மற்றும் வாதத்திறமை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
மேலும் பணத்துக்கும், அதிகாரத்துக்கும் வேறு சலுகைகளுக்கும் சோரம்போதல், டீல் வைத்துக்கொண்டு ஆட்சியாளர்களிடம் ஒரு முகமும், மக்களிடம் இன்னுமொரு முகமும் காண்பிக்கின்றவர்கள் எமது சமூகத்தின் அவமானச் சின்னங்கள்.
எனவேதான் சிறுபான்மையின மக்கள் வாக்களிக்கும்போது வேட்பாளரின் தகுதியையும் சற்று உரசிப் பாருங்கள். பின்பு குத்துது, குடையுது என்று புலம்பிக்கொண்டு திரிவதில் எந்தப்பயனும் இல்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments