புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதியை எவ்வாறு பெற்றுக் கொள்வது - எம்.எச்.எம். ரஸ்மி முன்னாள் நகர சபை உறுப்பினர்
புத்தளத்தில் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்வதில் தடையாக இருக்கும் மூன்று சாரார் யாரென்று தெரியுமா?
1.வாக்களிக்க செல்லாமல் இருப்பவர்கள் – 200,000 பேர்.
2.தவறாக வாக்களித்து நிராகரிக்கப்படும் வாக்குகள் – 25,000 வாக்குகள்.
3.சிந்தனையின்றி வாக்களித்து செல்லுபடியாகாதவாறு எறியப்படும் வாக்குகள் – 23,000 வாக்குகள்
எமது இலங்கை திருநாட்டில், எமக்கான சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பது எங்கள் ஜனநாயக உரிமையாகும்.
சிறுபான்மை சமூகத்துக்கென்று தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இருப்பது போன்று, சிறுபான்மை சமூகம் அதிகமாக வாழக்கூடிய பிரதேசங்களில் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது இலங்கையின் ஜனநாயக உரிமையாகும்.
புத்தளம் மாவட்டத்தில் வாக்குரிமை பெற்ற மக்களில் மொத்தத்தில் 1/4 பங்கினர் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினராக இருக்கின்றனர். எனவே, எமது மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 08 பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 02 பேர் எமது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது எமது ஜனநாயக உரிமையாகும். இதனை உறுதிப்படுத்த தேவையான வியூகங்களை அமைப்பது எமது கடமையாகும்.
நாம் வாக்களிக்கச் சென்றால்தான் எமக்கான பிரதிநிதியைத் தேர்வு செய்ய முடியும். அந்த பிரதிநிதிதான் எமது மாவட்ட மக்களின் சௌஜன்யமான வாழ்க்கையை மேம்படுத்தி, எமக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நாட்டின் முக்கியமான தீர்மானங்களில் உறுதுணையாக செயல்படுவதற்கும் துணை நிற்பார்.
1. வாக்களிக்க செல்லாதவர்கள் – 200,000 பேர்
எமது சமூகத்தில் பல ஆயிரம் மக்கள் வாக்களிக்கச் சென்றாலும், சில நூறு அல்லது ஆயிரம் வாக்குகள் குறைவாக இருப்பதால், எமக்கான பாராளுமன்ற பிரதிநிதியை இழக்கின்றோம். இந்த இழப்புக்கு காரணமானவர்கள், வாக்களிக்க செல்லாமல் இருக்கும் இந்த மேதாவிகள் தான். எமது முதல் எதிரிகள் இந்த வாக்களிக்கச் செல்லாத கூட்டமே. எனவே, மக்களே, அவர்களை அடையாளம் கண்டு, தூண்டி, உச்சாகப்படுத்துங்கள். பெரும்பான்மை சமூகத்தில் 80% பேர் வாக்களிக்கின்றனர், ஆனால் நமது சிறுபான்மை சமூகத்தில் 60% அல்லது 65% மட்டுமே வாக்களிக்கின்றனர். இந்த விகிதம் அதிகரித்தால் மட்டுமே எமக்கான சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
2.பிழையாக வாக்களித்து நிராகரிக்கப்படும் வாக்குகள் – 25,000 வாக்குகள்.
எமது மாவட்டத்தில் 25,000 க்கும் அதிகமானவர்கள் பிழையாக வாக்களிக்கின்றனர். வாக்களிப்பதில் சரியான முறையைப் புரிந்துகொள்ள, தேர்ச்சி பெற்றவர்களிடம் வாக்கு செலுத்தும் முறையைச் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கும் முறையை நன்றாக அறிந்தவர்கள் உங்கள் அயலவர்களுக்கு அதை கற்றுக்கொடுங்கள். இது ஒரு நன்மையான சமூக சேவையாகும். இல்லையேல், நாம் சரியாக வாக்களிக்காமல் சில வாக்குகளால் எமக்கான பிரதிநிதியை இழந்துவிட நேரிடும்.
3.சிந்திக்காமல் வாக்களித்து குப்பைக்குள் வீசப்படும் வாக்குகள் – 23,000.
இது மிகவும் கவலையான விடயம். எம்மில் அதிகமானோருக்கு 5% வெட்டுப்புள்ளி என்ற தேர்தல் சட்டம் தெரியாமல் இருக்கிறது. அதாவது, 5ஆம் ஆண்டு புலமை பரீட்சை வெட்டுப்புள்ளி (Cut off Marks) போன்று, தேர்தலிலும் வெட்டுப்புள்ளி என்ற ஒன்று உள்ளது. இது மாவட்டத்துக்கு மாவட்டம் வாக்களிப்பு வீதத்தைப் பொறுத்து மாறுபடும். அதன்படி, புத்தளத்தில் இம்முறை வெட்டுப்புள்ளி சுமார் 25,000 ஆக இருக்கும்.
எனவே எந்த கட்சி 25000க்கு மேற்பட்ட வாக்குகளை பெறவில்லையோ அவர்களது வாக்குகள் மொத்தமாக குப்பைக்குத்தான் செல்லும். இந்த கட்சிகளின் விருப்பு வாக்குகள் எண்ணப்படவும் மாட்டாது. எமது மாவட்டத்துக்கான ஆசனங்களை பகிர்ந்தெடுக்கும் கணக்கு சூத்திரத்துக்குள் உள்வாங்கப்படவும் மாட்டாது.
எனவே, நீங்கள் உங்கள் வாக்குகளை 25,000 க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறும் கட்சிகளை தேர்வு செய்து, உங்கள் வாக்குகளை பயனுள்ளதாக ஆக்குங்கள்.
அந்த வகையில், இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை ஒப்பீட்டு நோக்கி் பார்க்கும் போது, இந்தமுறை 25,000க்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய கட்சிகள்:
1.NPP எனும் அநுரகுமாரவின் திசைகாட்டி கட்சி
2.SJB எனும் சஜித் பிரேமதாச அவர்களின் தொலைபேசி கட்சி
3.NDF எனும் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கேஸ் சிலிண்டர் கட்சி
இவை தவிர்ந்த மற்ற கட்சிகள் 25,000க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாத நிலைமையில்தான் உள்ளது, மக்கள், உங்களது வாக்குகளை வீணடிக்காமல், சிந்தித்து மேலே குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களித்து, உங்கள் வாக்குகளை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாக்குகள் குப்பைக்குள் வீசப்படுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால், யார் ஆளும் கட்சி மற்றும் யார் எதிர்கட்சி என்ற வாதம் பிழையானதாகும்.
இம்முறை எந்தவொரு கட்சியும் தனித்து அரசாங்கம் அமைக்கும் சாத்தியம் மிகக்குறைவாகவே உள்ளது.
பொதுத்தேர்தலில் பின்னர் வரும் ஆளும் கட்சிகளுக்கான சாத்தியங்கள் பின்வருமாறு:
1. NPP (அனுர) + SJB (சஜித்)
2. NPP (அனுர) + NDF (ரணில்)
3. SJB (சஜித்) + NDF (ரணில்)
4.அல்லது எல்லோரும் இணைந்தொரு தேசிய அரசாங்கமாகவும் இருக்கலாம்.
எனவே, இப்போது ஆளும் கட்சி யார் என்பது எம்மால் கூற முடியாது. பாராளுமன்றம் யாரிடம் என்ற முடிவு எடுக்கப்படாதவரை அநுர ஆளும் கட்சியாக இருக்க முடியாது.
அநுர என்பது ஒரு ஜனாதிபதியாக மட்டுமே இருக்கிறார்;
கடந்த 2002-ல் PA கட்சியைச் சேர்ந்த சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாகவும், UNF கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராகவும் இருந்த வரலாறு இலங்கையில் உண்டு. அதுபோல் இம்முறையும் எதுவும் நடக்கலாம்.
மேலும், மேலே கூறிய மூன்று கூட்டணிகளில் எந்த கட்சிக்கு வாக்களித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியுமோ, அந்த கட்சிக்கும், அந்த கட்சியில் போட்டியிடும் சிறுபான்மை நபர்களுக்கும் விருப்பு வாக்குகளை வழங்கி, உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்.
NPP எனும் ஜனாதிபதி அநுரவின் திசைகாட்டி சின்னத்தில் சிறுபான்மை ஒருவர் வெற்றிபெறமுடியுமா?
கடந்த 2020 தேர்தலில் 05 உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட மொட்டு(SLPP) கட்சியின் 05ஆம் இடம் பெற்றுக்கொண்ட இறுதி உறுப்பினரான அசோக பிரியரத்ன என்பவர் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 42000 ஆகும். பொதுவாக அதிக உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் பெரும்பான்மை கட்சிகளில் எமது சிறுபான்மை வேட்பாளர்கள் 20000 வாக்குகள் எடுப்பதே சிரமசாத்தியமான விடயமாகும். எனவே இம்முறை வாக்குப்பதிவுகளும் அதிகரித்துள்ளமையால் திசைகாட்டி சின்னத்திலுள்ள சிறுபான்மை உறுப்பினர் 50000 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டால் மாத்திரமே அவரால் வெற்றிபெறமுடியும். பொதுவாகவே இனவாதம் தலைதூக்கி நிற்கும் இந்த காலத்தில் பெரும்பான்மை சமூகம், எமது சிறுபான்மை வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் கொடுப்பதில்லை.
எனவே இந்த சந்தர்ப்பம் எமது தொலைபேசி சின்னத்திலுள்ள மூன்று சிறுபான்மை உறுப்பினர்களை வெற்றிபெறச்செய்யும் ஒரு அறிய சந்தர்ப்பமாகும். இதனை நாம் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொள்ளல் வேண்டும். இவர்கள் தனி விருப்பு வாக்குகளை மக்களிடம் கோராமல், மூவருக்கும் வாக்களிக்குமாறு முயற்சி எடுத்தல் வேண்டும்.
இல. 04 - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் NTM தாஹிர்
இல. 07 - இளம் சட்டத்தரணியும், சமூகவியலாளருமான MH மொஹமட்
இல. 11 - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் SHM நியாஸ்
போன்ற சிறந்த அனுபவமிக்க, மக்களின் உள்ளங்களை வென்றெடுத்த இம்மூவரையும் நாம் முன்மொழியலாம்.
எம். எச். எம். ரஸ்மி
முன்னாள் நகர சபை உறுப்பினர்.
புத்தளம்.
No comments