Breaking News

அனுரகுமாரவின் ஆட்சி எவ்வளவு காலங்கள்வரை நீடிக்கும்? சிங்கள மக்களின் மனோநிலை என்ன ?

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான பிரச்சினைகளை பெரும்பான்மை மக்கள் எதிர்கொண்டபோது ஆட்சியாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தார்கள் என்பதற்காக ஒரே தரப்பினருக்கு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தினை சிங்கள மக்கள் வழங்கியதில்லை. 


2009 வரைக்கும் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தம்தான் முதன்மைப் பிரச்சினையாக இருந்தது. அதனை முடிப்பவர்களே சிங்கள மக்களின் கதாநாயகர்கள் என்ற பார்வை இருந்தது.  


ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதில் தோல்வியடைந்ததனால், மகிந்த ராஜபக்ச அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அதனால் சிங்கள மக்கள் மகிந்தவை எல்லாளன் மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு மன்னனுக்கு இணையாக கொண்டாடினர். 


மகிந்தவின் ஆட்சியை இன்னும் இருபது வருடங்களுக்கு அசைக்க முடியாதென்ற பார்வை அப்போது இருந்தது. ஆனால் 2015 இல் நியாயமான காரணங்களின்றி மகிந்தவை வீட்டுக்கு அனுப்பினார்கள். 


2019 இல் 69 இலட்சம் வாக்குகளை பெற்று கோட்டா ஆட்சிபீடம் ஏறியதும் ராஜபக்ச குடும்பத்தை அசைக்க முடியாது. நாமலின் புதல்வர் வரைக்கும் ராஜபக்சவின் குடும்பமே தொடர்து ஆட்சி செய்யும் என்றனர். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது முழுமையாக ஆட்சி செய்யவிடாமல் அவரை துரத்தியடித்தனர்.


சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் மக்கள் வறுமையில் துன்பப்பட்டபோது ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சிபீடம் ஏறி வறுமையை போக்கினார். ஆனாலும் 1983 இல் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு பயத்தினால் ஊழல் நிறைந்த சர்வசன வாக்கெடுப்பினை நடத்தி தன்னை காத்துக்கொண்டார்.


1994 இல் 62.28 வீத வாக்குகளினால் வெற்றிபெற்ற சந்திரிக்கா அவர்கள் 1999 இல் சிங்கள மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் நடைபெற்ற புலிகளின் தற்கொலை தாக்குதலில் காயமடைந்தார். இதனால் ஏற்பட்ட அனுதாபத்தினால் தோல்வியிலிருந்து மயிரிழையில் தப்பித்துக்கொண்டார். 


அதுபோலத்தான் தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழல் நிறைந்த முதலாளித்துவ தலைவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அனுரகுமார திசாநாயக்காவுக்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளதுடன், நடைபெற உள்ள தேர்தலில் அவர்களே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.  


ஆனாலும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சக்தி அனுரகுமாரவிடம் உள்ளது. அதன்பின்பு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தினை சிங்கள மக்கள் வழங்குவார்களா ? எவ்வளவு காலத்துக்கு வழங்குவார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note