முஸ்லிம்களிடம் பிரதேசவாதத்தை விதைப்பது யார் ? இதனால் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு ?
அரசியல்வாதிகளில் சிலர் தூரநோக்கில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கும், நிரந்தரமான ஆதரவுத் தளத்தினை தனது ஊரில் உருவாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தும் ஓர் கருவிதான் பிரதேசவாதமாகும்.
இந்த பிரதேசவாதம் என்னும் கொடூர நோயினால் சமூகத்துக்குள் ஒற்றுமை இழந்து பிளவுகளும், பிரிவினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து காணப்படுகின்றது.
இவ்வாறான பிரிவினைகள் மூலமாக எமது சிறுபான்மை சமூகம் பலயீனம் அடைந்துவிடும் என்ற எந்தவித கவலைகளும் இந்த அரசியல்வாதிகளிடம் இல்லை. அவர்களிடம் காணப்படுகின்ற சுயநலனே இதற்கு காரணமாகும்.
சிலர் வெளிப்படைகாக அல்லது தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மூலமாக தனது ஊர் மக்களிடத்தில் பிரதேசவாத சிந்தனைகளை விதைப்பார்கள். ஆனால் வேறு சிலர் வெளிப்பார்வையில் சமூகம் என்று பேசினாலும் அவர்களது செயல்பாடுகள் மூலமாக பிரதேசவாத போக்கினை புரிந்துகொள்ள முடிகின்றது.
பாமர மக்களிடம் போதிய அரசியல் அறிவின்மை காரணமாகவே பிரதேசவாத சிந்தனைகள் வெற்றிபெறுகின்றது.
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் நாட்டு நலன் பற்றியே பேசுவார்கள். அவர்களிடம் முஸ்லிம்களைப் போன்று குறுகிய பிரதேசவாத சிந்தனைகள் இருந்ததில்லை.
அதுபோல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் “இணைந்த வடகிழக்கு எங்கள் தாயகம், மற்றும் சுயநிர்ணய உரிமை” பற்றியே பேசுவார்கள். ஆனால் முஸ்லிம்களிடத்தில் மாத்திரம் “ஊருக்கு எம்பி வேண்டுமென்ற” குறுகிய கோசம் மேலோங்கிக் காணப்படுகின்றது. இது ஒரு ஆபத்தான விடையமாகும்.
மொத்தமாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கத்தக்கதாக ஒவ்வொரு ஊருக்கும் அதனை வழங்குவதென்றால் அது சாத்தியமாகுமா ? அப்பதவியால் இதுவரையில் சாதித்தது என்ன ? என்று சிந்திக்கும் அறிவு பாமர மக்களிடத்தில் இல்லை.
அத்துடன் இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இருக்கின்ற ஊர் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது அதாவது தொடர்ந்து தங்களது ஊரில் எம்பி பதவி இருக்க வேண்டுமென்று கூறுகின்றார்கள்.
இவ்வாறு அரசியல்வாதிகளின் குறுகிய பிரதேசவாத சிந்தனைகளால் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் அரசியல் இருப்பு பலயீனமடைந்து காணப்படுகின்றது. இதைத்தான் பெரும்பான்மை தேசிய கட்சிகள் விரும்புகின்றன.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments