புத்தளத்தில் நடைபெற்ற "ஜெயாபார்ம் வெற்றிக்கிண்ணத்துக்கான" காற்பந்தாட்ட தொடர். சம்பியன் கிண்ணங்களை தொடராக அள்ளிக் குவித்து வரும் புத்தளம் லிவர்பூல் அணி இந்த கிண்ணத்தையும் தனதாக்கி இமாலய சாதனை.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் காற்பந்தாட்ட லீக்கினால் புத்தளத்தில் தொடராக நடாத்தப்பட்டு வந்த ஜெயா பார்ம் வெற்றிக் கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட தொடரின் சம்பியனாக, புத்தளத்தில் சம்பியன் கிண்ணங்களை தொடராக சுவீகரித்து வருகின்ற பிரபலமான காற்பந்தாட்ட கழகமான லிவர்பூல் மீண்டும் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டி புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (18) மாலை இடம் பெற்றது.
இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியை கண்டு களிக்க புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கானது அதிகமான ரசிகப் பெருமக்களால் நிறைந்து வழிந்ததை காணக் கூடியதாக இருந்தது.
இந்த இறுதிப் போட்டியிலே லிவர்பூல் அணியோடு, மணல் குன்று அல் அஷ்ரக் அணி பலப்பரீட்சை நடாத்தியது.
புத்தளம் மணல் குன்று அல் - அஷ்ரக் அணியானது கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு 2018 இல் புத்தளம் காற்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்று குறுகிய காலத்துக்குள் தமது திறமையை வெளிக்காட்டி இறுதிப்போட்டியில் பங்கெடுத்தது.
ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்கி இருந்தார்.
இறுதிப் போட்டியிலே லிவர்பூல் அணியானது 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்று சம்பியனாகியதோடு இரண்டாம் இடத்தை அல் - அஷ்ரக் அணி பெற்றுக் கொண்டுள்ளது.
லிவர்பூல் அணிக்காக அதன் வீரர்களான ரிஸ்வான் மற்றும் ஆஷிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும், அல் - அஷ்ரக் அணிக்காக அதன் வீரர் நிசார் ஒரு கோலினையும் பெற்றுக் கொடுத்தனர்.
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக லிவர்பூல் அணியின் வீரர் எம்.என்.எம்.ஆஷிக், சிறந்த கோல் காப்பாளராக அதே அணியின் சிறு வயது வீரர் எம்.சராப் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதி போட்டிக்கு 06 பேர் நடுவர்களாக கடமையாற்றினர். எம்.எஸ்.எம்.ஜிப்ரி, ஏ.ஓ.அஸாம், எம்.ஆர்.எம்.அம்ஜத், எம்.ஏ.எஸ்.எம்.அஸ்பான், எம்.என்.எம்.ஹிஜாஸ், எம்.எஸ்.எம்.நௌபி ஆகியோர் நடுவர்களாகவும், போட்டி ஆணையாளராக புத்தளம் உதைபந்தாட்ட லீக்கின் நிறைவேற்று குழு உறுப்பினரும், போட்டி தொடரின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஜெனூசனும் கடமையாற்றினர்.
லிவர்பூல் கழக அணியினை அதன் முகாமையாளர் எம்.ஓ.ஜாக்கிரும், பயிற்றுவிப்பாளர் எச்.அம்ருசைனும் வழி நடாத்தி இருந்தனர்.
அல் - அஷ்ரக் அணியினை அதன் முகாமையாளர் முஹம்மது சியாமும், பயிற்றுவிப்பாளர் ஹாலித் முளப்பரும் வழி நடாத்தி இருந்தனர்.
சம்பியனாகிய லிவர்பூல் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், இரண்டாம் இடம் பெற்ற அல் - அஷ்ரக் அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கி வைக்கப்பட்டன.
இரு அணியின் வீரர்களுக்கும் இதன்போது பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
இதேவேளை அண்மையில் அநுராதபுரம் நகரில் நடைபெற்ற பாடசாலைகளுக்கான 16 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட போட்டியில் அகில இலங்கை சம்பியனாக தகுதி பெற்ற புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் பாடசாலை அணி வீரர்களும், 20 வயதுக்குட்பட்ட போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி வீரர்களும் இதன்போது பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபை முன்னாள் தலைவருமான எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக ஜெயா பார்ம் நிறுவனத்தின் உரிமையாளர் ஜயான் ஜயவர்தன கலந்து கொண்டார்.
லீக்கின் உப தலைவரும், நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், தொடரின் ஒருங்கிணைப்பாளருமான ரனீஸ் பதியுதீன், தொடரின் அனுசணையாளர், ஜெயா பார்ம் புத்தளம் பிராந்திய பணிப்பாளர், நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா, ஜெயா பார்ம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், எயார்டெல் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய முகாமையாளர் எம்.எப்.எம்.பவாஸ், புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலைகளின் அதிபர்கள், உலமாக்கள் உள்ளிட்ட லீக் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
குறிப்பு :
இளம் பச்சையும், கறுப்பும் நிறங்கள் கலந்த ஜேர்ஸி அணிந்திருப்பவர்கள் சம்பியன் லிவர்பூல் அணியினர்.
வெள்ளையும், நீலமும் நிறங்கள் கலந்த ஜேர்ஸி அணிந்திருப்பவர்கள் இரண்டாம் இடம் பெற்ற அல் அஷ்ரக் அணியினர்.
No comments