Breaking News

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் ஓர் ஆய்வு.

பலமுள்ள எதிரி நாட்டுக்கு உள்ளே நுழைந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதென்றால், தாக்கிவிட்டு விமானங்களை பத்திரமாக எவ்வாறு தளத்துக்கு திருப்ப முடியும் என்றுதான் முதலில் திட்டமிடுவார்கள். 


100 க்கு மேற்பட்ட எண்ணிக்கைகள் கொண்ட F35 மற்றும் F16 போன்ற போர் விமானங்கள் மூலமாக ஈரானுக்குள் சென்று நேற்று அதிகாலை (26.10.2024) தாக்குதல் நடாத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. 


நூற்றுக்கு மேற்பட்ட விமானங்களை ஒரே தடவையில் தாக்குதலுக்கு அனுப்புவதென்றால், அதனை விட எண்ணிக்கையில் அதிகமான விமானங்கள் இஸ்ரேலிடம் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் ஒரு F35 விமானத்தின் பெறுமதி இலங்கை நாணயத்தின்படி 3 ஆயிரம் கோடி தொடக்கம் 5 ஆயிரம் கோடிகள் பெறுமதியானது.   


ஈரான் மிகவும் பெரிய நிலப்பரப்பைக்கொண்ட பலமான இஸ்லாமிய நாடு. அது ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றதல்ல. இலங்கையின் நிலப்பரப்பை  போன்று 25 மடங்கு பெரியது.  


ஈரானின் எல்லை நாடுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அசார்பைஜான், துர்க்மேனிஸ்தான், ஆர்மேனியா, துருக்கி, ஈராக் ஆகிய எட்டு நாடுகள் உள்ளது.


குறித்த அயல்நாடுகள் அனைத்தும் ஈரானுடன் நல்ல உறவில் உள்ளது. அதாவது ஈரானை தாக்குவதென்றால் இஸ்ரேலுக்கு தளம் வழங்குவதற்கோ, அவர்களது யுத்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கோ எந்தவொரு நாடும் முன்வராது.


அத்துடன் ஈரானின் இராணுவ கேந்திர நிலைகள், ஏவுகணை தளங்கள், விமான எதிர்ப்பு நிலைகள், விமானப்படை தளங்கள் என முப்படை நிலைகளும் ஈரானின் எல்லையை சுற்றிவர நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது. 


ஈரானின் மத்திய பிரதேசங்களில் அமைந்துள்ள கேந்திர நிலைகள் மீது விமானம் மூலமாக தாக்குவதென்றால் அதன் எல்லையிலிருந்து நீண்ட நேரம் உள்ளே பயணிக்க வேண்டும்.  


ஜோர்டான், ஈராக் வழியாக அல்லது ஜோர்டான், சவூதி அரேபியா வழியாக ஈரானுக்கு உள்ளே சென்று தளங்களை தாக்கியழிப்பதென்றால் ஆகக்குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பறந்துசென்று மீண்டும் அதே தூரம் பயணித்து தளம் திரும்பி வரவேண்டும்.


அவ்வாறில்லாமல் செங்கடல் வழியாக பயனிப்பதென்றால் அதைவிட மிக அதிகமான தூரம் பயணிக்க வேண்டும். அவ்வாறு நீண்ட நேரம் பறப்பதற்கு போர் விமானங்களின் எரிபொருள் தாங்கிகள் போதுமானதாக இல்லை. அதாவது இடையில் எரிபொருள் நிரப்ப வேண்டும். அவ்வாறு நூற்றுக்கணக்கான விமானங்களுக்கு ஒரே தடவையில் எரிபொருள் நிரப்புவதென்பது சாத்தியமற்ற விடையமாகும். 


அவ்வாறு சென்று ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்திவிட்டு திரும்பி வரும் வரைக்கும் ஈரானின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், விமானப் படையினர்களும் கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். எதிரி விமானம் நாட்டுக்குள் நுழைந்தால் அதனை விரட்டியடிப்பதற்கு அல்லது தாக்கியழிப்பதற்கான திறன் அவர்களிடம் உள்ளது.


இந்த நிலையில் சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் வான்பரப்பை பாவிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலிய விமானங்கள் அந்த நாடுகள் வழியா சென்று ஈரானுக்கு உள்ளே நுழையாமல் விமானத்திலிருந்து ஏவுகணை தாக்குதல்களை நடாத்தியுள்ளது.  


இஸ்ரேல் நடாத்திய தாக்குதல்கள் அனைத்தும் ஈரானின் வான்பாதுகாப்பு சாதனங்கள் மூலமாக அழிக்கப்பட்டதுடன், சில ஏவுகணைகளின் தாக்குதல் இலக்குகளை திசை மாற்றம் செய்துள்ளனர்.   


இஸ்ரேல் கூறுவதுபோன்று நூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் மூலமாக பாரியளவிலான தாக்குதல்கள் வெற்றியளித்திருந்தால், ஈரானில் பாரியளவிலான சேதங்கள் ஏற்பட்டிருக்கும். அவ்வாறு இவர்கள் கூறுவதுபோன்று குறிப்பிட்டு கூறக்கூடிய சேதங்கள் எதுவும் ஈரானில் ஏற்படவில்லை. 


ஆனால் தங்களது தாக்குதல் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்பட்டதென்று உலகை நம்பவைப்பதற்காக சில வீடியோக்களை இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் வெளியிட்டிருந்தனர். பின்பு அந்த காட்சிகள் பழையவை என்று நிரூபிக்கப்பட்டதன் காரணமாக அந்த வீடியோக்களை நீக்கிவிட்டனர். இவைகள் இஸ்ரேலுக்கு பலத்த அவமானமாகும். 


எனவே ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹௌதி போன்ற அமைப்புக்களின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் அண்மைய தாக்குதல்கள் காரணமாக சர்வதேச ரீதியில் இழந்திருக்கின்ற தனது மரியாதையை மீண்டும் சரி செய்வதற்கு இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதல் முயற்சிகள் புஸ்வாணமாகி உள்ளதுடன், பலத்த அவமானத்தையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தி உள்ளது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note