இனவாதிகள் உயிரோடுள்ள நிலையில் முஸ்லிம்கள்தான் இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதா ? நாங்கள் அல்-குரானை எரித்தவர்கள் ?
இனவாதம் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்பது தோழர் அனுரகுமார திசாநாயக்கா மற்றும் அவர்களது கட்சியின் சிறந்த கொள்கையாகும்.
அதில் வரிந்துகட்டிக்கொண்டு ஆர்வக்கோளாறு காரணமாக ஒருபடி மேலே சென்று “முஸ்லிம்” என்று உச்சரிப்பதனை ஒரு இனவாதமாக எம்மவர்களே தற்போது சித்தரிக்கின்றனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளை இனவாதக் கட்சிகள் என்கின்றனர். எமது தனித்துவ அரசியல் அடையாளத்தை இனவாதம் என்று முத்திரை குத்துகின்றனர்.
சிலர் அரசியல் நோக்கத்துக்காகவும், இன்னும் சிலர் அறியாமையினாலும் இவ்வாறு கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.
அனுரகுமார ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் சரியாகிவிட்டது. இனிமேல் இந்த நாட்டில் இனவாதமே இருக்காது. முடிவின்றி தொடர்ந்து அனுரகுமாரவே ஆட்சி செய்வார் என்ற அதீத நம்பிக்கையில் சிலர் உள்ளனர்.
ஆனால் கடந்த காலங்களில் இந்த நாட்டில் இனவாதத்தை விதைத்து பராமரித்து போசித்த அனைவரும் இன்னமும் உயிரோடு வாழ்வதுடன், இந்த ஆட்சியை எப்போது கவிழ்க்கலாம் என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதனை நாங்கள் அவதானிக்க தவறியுள்ளோம்.
இனவாதத்தை இந்த நாட்டில் வேரோடு அழிப்பதென்றால் முஸ்லிம் அரசியல் கட்சிகளை இனவாதக் கட்சிகள் என்று விமர்சிப்பதால் மாத்திரம் முடியாது.
இதனை முளையிலேயே கிள்ளி எறிதல் வேண்டும். அதாவது ஆரம்ப பாடசாலைகளிலிருந்து மகாவித்தியாலயங்கள் வரைக்கும் நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் உள்ள “முஸ்லிம்” என்ற பெயரை நீக்குதல் வேண்டும்.
அத்துடன் சிங்கள, தமிழ் பாடசாலைகளின் பெயர்களில் உள்ள பௌத்த, ஹிந்து மற்றும் சாந்த என்று வருகின்ற சொற்கள் மற்றும் தமிழ், சிங்கள என்ற வார்த்தைகளையும் நீக்குதல் வேண்டும்.
மேலும் தனியாக ஒரு இனத்துக்கென்று பாடசாலைகளை ஒதுக்காமல் அனைத்து இன மக்களும் கலந்து கல்வி கற்கின்ற நிலை பாடசாலைகள் மட்டத்தில் உருவாக்கப்படல் வேண்டும். அப்போதுதான் இன, மத பாகுபாடுகள் இல்லாத சமத்துவமான நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். அதாவது “முஸ்லிம்” என்ற வார்த்தையை நீக்குவதற்கு முஸ்லிம்களில் சிலர் உடனே சம்மதிப்பார்கள். ஏனெனில் 2019 இல் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பின்பு நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக புனித அல்-குர்ஆனையே எரித்தவர்கள் நாங்கள். இதன்மூலம் எங்களது உணர்வும், ஈமானும் எவ்வளவு பலமாகவும், உறுதியாகவும் உள்ளது என்பதனை அறிய முடிகிறது.
ஆனால் தங்களது அடையாளத்தை நீக்குவதற்கு சிங்கள, தமிழ் தரப்பினர் சம்மதிப்பார்களா என்றால் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள்.
அப்படியென்றால் இனவாதம் இல்லாத நாட்டை எவ்வாறு உருவாக்குவது. முஸ்லிம் என்ற அடையாளத்தை நீக்கினால் மாத்திரம் சமத்துவத்தை கட்டியெழுப்ப முடியுமா என்றெல்லாம் சற்று ஆழமாக சிந்திப்பது நாம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments