அரசியல் விமர்சனமும், எதிர்பார்ப்பும்.
எனது அரசியல் விமர்சனங்கள் எப்போதும் நேர்மையானதாக சமூகம் சார்ந்திருக்கும் என்பதில் அரசியல் அறிவு உள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். தனிப்பட்ட குரோதம், பழிவாங்கல்கள், பொறாமை, வஞ்சகம், ஊர் துவேசம் போன்ற நோக்கில் எவரையும் விமர்சித்ததில்லை.
சமூக அரசியலில் பிழைகள் செய்த காரணங்களுக்காக அந்தந்த காலகட்டங்களில் அல்லது சூழ்நிலைகளுக்கு ஏற்ப வஞ்சகம் இல்லாமல் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்திருக்கின்றேன்.
முஸ்லிம்களின் அரசியல் இயக்கமான முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு உழைத்தவர்களில் நானும் ஒருவன். அப்படியிருந்தும் அதன் தலைவர் ரவுப் ஹக்கீமையும் விமர்சனம் செய்திருக்கின்றேன்.
நான் நினைத்திருந்தால் மு.கா தலைவர் அதிகாரத்தில் இருந்தபோது அவரிடம் ஏதாவது சலுகைகள் அல்லது கட்சியில் பதவிகளை பெற்றிருக்கலாம். ஆனால் எப்போதும் எனது கை சுத்தமாகவே உள்ளதென்பது எனது நண்பர்களுக்கு தெரியும்.
அத்துடன் இந்த விமர்சனங்கள் அனைத்தும் சமூக நலனை முன்னிறுத்தி அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவேயன்றி பொறாமையினால் அவர்களை அழிக்கும் நோக்கில் அல்ல.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நான் விமர்சிக்கின்றபோது அது அவரது எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சாதகமாக அமைகின்றதனால் மகிழ்ச்சியடைகின்றனர். அதனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நான் தொடர்ந்து விமர்சிக்க வேண்டுமென்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பக்கம் உள்ள சில நியாயங்கள் பற்றி நேற்று பதிவிட்டிருந்தேன். அது சிலருக்கு ஜீரணித்துக்கொள்வது கடினமாக இருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அதாவது ரவுப் ஹக்கீம் இருபதாவது திருத்தத்தை எதிர்த்ததுடன், ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்து, ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டார் என்பது நடைபெற்ற உண்மை சம்பவம். இதனைக் கூறுவதில் என்ன தவறு உள்ளது.
ஒருவரது குறைகளை மாத்திரம் விமர்சிக்கத் தெரிந்தவர்களுக்கு அவரிடம் உள்ள நல்லவைகள் பற்றி தெரிவதில்லை. எனவே விமர்சனம் என்பது இரண்டு பக்கங்களையும் உள்ளடக்க வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments