Breaking News

சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேற்வே திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் ரூபா 10 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேற்வேயைத் திறந்து வைத்து, அது மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு(01) பாடசாலையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வி சட்டத்தரணி மரியம் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாடசாலையின் அதிபர் எம். எஸ். எம் .ஆரிப் தலைமையில்  இடம் பெற்ற இந்நிகழ்வில், 

பேண்ட் வாத்திய இசைக் குழு மற்றும் பொல்லடிக் குழுவினரால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு, அதிதிகள் வரவேற்கப்பட்டதோடு, முன்னாள் அதிபர் நாபித், முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம். சி. ஆதம்பாவா மற்றும் இன்னும் பல அதிதிகளும் ஊர்ப் பிரமுகர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்களும் இந்நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தனர்.


இதன்போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், பாடசாலையின் கடந்த கால வரலாற்றையும் தற்காலம் முன்னேறிக் கொண்டு வருகின்ற இப்பாடசாலையின் மிக மிக முக்கிய தேவைப்பாடாகவிருந்த கேற்வே அமைக்கும் வேலைத்திட்டத்தை சுமார் பத்து இலட்சம் ரூபாய் செலவில் தனது சொந்த நிதியிலிருந்து செய்து, மிக அவசரமாக  நிறைவேற்றிக் கொடுத்த சட்டத்தரணி மர்யம் மன்சூர் அவர்களுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். இவ்வாறான சேவைகளை நீங்கள் இன்னும் இன்னும் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதோடு, சிறப்பான இச்சேவையை செய்து வருகின்றமைக்காக தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் .


இங்கு உரையாற்றிய சட்டத்தரணி மர்யம் மன்சூர், இப்பாடசாலை உயிர், இரத்தம், ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பெயர் தாங்கிக் காணப்படுகின்ற பாடசாலையாகும். ஏனைய பாடசாலைகள் போன்று இது ஒரு சாதாரண பாடசாலை அல்ல. இப்பெயர் எனது உம்மாவின் வாப்பாவான தொப்பி வாப்பா என்று அழைக்கப்படுகின்ற எம்.எஸ். காரியப்பர் என்ற இந்த நாமம் இந்தப் பிரதேசத்தை சந்தோசமாக ஆட்சி செய்த, இந்தப் பிரதேசத்தை காட்டியெழுப்பிய தலைவரின் பேரப்பிள்ளையாக இருந்து, அந்தப் பெயரைப் பறைசாற்றியவராக இந்த நிகழ்வில் நான் இன்று பேசுகின்றேன்.


கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் என்ற பெயர் கொண்ட இந்தப் பாடசாலைக்கு கேற்வே அமைத்துக் கொடுத்து, அதனை இன்று திறந்து வைத்து, இந்தப் பொலிவேரியன் கிராமத்தில் கற்கின்ற சிறார்களுக்கு கையளிப்பதையிட்டு நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். இது முடிவுமல்ல;  இறுதியுமல்ல.  இந்தத் திறப்பு விழாவானது ஆரம்பம் மட்டுமே! இன்னும் இன்னும் இந்தப்பாடசாலைக்கு உதவி செய்ய இருக்கின்றேன் என்றும் தெரிவித்த அவர், இந்நிகழ்வு நடைபெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைத்த பாடசாலை அதிபர் எம்.எஸ். எம்.ஆரிப் அவர்களுக்கு நன்றியுடன் நினைவு கூர்ந்து தனது பாராட்டினையும் தெரிவித்தார். 


இதன் போது கல்முனை வலயக் கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் சட்டத்தரணி மரியம் மன்சூர் சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் அஸ்மா மலிக் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் இணைந்து அயராத இந்த சமூக சேவைக்காக சட்டத்தரணி மர்யம் மன்சூருக்கு நினைவுக் கேடயம் ஒன்றை வழங்கியும் கௌரவித்தனர். 


அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்து, சபையோரை மகிழ்ச்சிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.









No comments

note