ஹரீஸ் எம்பிக்கு தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டது ஆச்சர்யம் ! ஆனாலும் சில சந்தேகங்கள்.
நான்கு வேட்பாளர்களின் அழுத்தம் காரணமாக ஹரீஸ் எம்பிக்கு தேர்தலில் போட்டியிட முடியவில்லை. அரசியல் ஒரு சித்து விளையாட்டு என்பதனால் வெளித்தோற்றத்தை மாத்திரம் நம்பமுடியாது.
ஹரீஸ் எம்பியை பொறுத்தவரையில் தேர்தல்காலங்களில் இரவுபகலாக தூக்கமின்றி தனது வெற்றிக்காக உழைப்பவர். இவரின் வெற்றிக்கு உறுதுணையாக அவரது சகோதரரும், அவரது ஊரை சேர்ந்த ஆதரவாளர்களும் உள்ளனர்.
ஹரீஸ் எம்பியின் கடந்த அரசியல் வரலாற்றினை அடிப்படையாகக்கொண்டு ஊகத்தின் அடிப்படையில் ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ஹரீஸ் அவர்கள் 2001 இல் முதன்முதலாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது கல்முனையில் முஸ்லிம் காங்கிரசின் பிரபலங்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
ஹரீஸ் எம்பியின் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். ஆனால் 2004 இல் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரே ஒரு தேர்தலில் மாத்திரம் தோல்வியடைந்தார்.
2001 தேர்தலில் ஹரீசின் பெயர் மு.கா வேட்பாளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்காக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கொழும்பில் தலைவரது வீட்டினை முற்றுகையிட்டு அழுத்தம் வழங்கினர். அப்போது நாங்கள் நிஜாமுதீனுக்காக சாய்ந்தமருதிலிருந்து சென்று அதே வேலையை செய்தோம்.
பின்பு நடைபெற்ற ஒவ்வொரு பொது தேர்தல்களுக்காக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போதெல்லாம் திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய கட்சியின் சின்னத்தில் மூன்று தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களை மாத்திரம் நிறுத்த வேண்டுமென்று தலைவரின் இல்லம் முன்பாக ஹரீஸ் எம்பியின் ஆதரவாளர்களினால் அழுத்தம் வழங்கினர்.
கட்சியின் மரச்சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து ஊர்களிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமென்ற சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, பொத்துவில் போன்றவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இறுதியில் ஹரீஸ் எம்பியின் அழுத்தமே ஒவ்வொரு தேர்தல்களிலும் மேலோங்குவது வழமை.
இப்போ கேள்வி என்னவென்றால், ஹரீஸ் எம்பி அவர்கள் தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் எவ்வாறு போட்டியிடுவது என்பதில்கூட தலைவருக்கு அழுத்தம் வழங்கி, மிக கவனமாக கடந்த காலங்களில் காய்நகர்த முடியுமென்றால்,
இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் முற்றாக மறுக்கப்பட்ட சூழ்நிலையில் தனது ஆதரவாளர்களை திரட்டி ஏன் தலைவருக்கு எதிராக அழுத்தம் வழங்கவில்லை ? கூக்குரலிடவில்லை ? ஏன் கல்முனை பசார் மூடப்படவில்லை ? ஏன் ஹர்த்தால் அல்லது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ? ஹரீசின் ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு ஏன் பொம்மை கட்டி ஊர்வலம் செல்லவில்லை ? போன்ற கேள்விகள் எழுகின்றது.
என்னுள் உள்ள சந்தேகம் இதுதான். ஏராளமான அரசியல் சக்திகள் இந்த தேர்தலிலிருந்து ஒதுங்கிய நிலையில் ஹரீஸ் எம்பியும் இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமில்லாமல் தனது ஆதரவாளர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் நோக்கில் ஆர்வமுள்ளவராக காண்பித்தாரா என்பதுதான் எனது சந்தேகமாகும்.
ஏனெனில் ஹரீஸ் எம்பி நினைத்திருந்தால் அவருக்கு எதிரான நான்கு பேரையும் சமாளித்திருக்கலாம் அல்லது அவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். தேர்தல் காலங்களில் எவ்வளவோ வித்தைகள் காண்பிக்கின்ற இவரால் இதனை செய்ய முடியாமல் போனது ஏன் என்பதுதான் எனது சந்தேகமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments