Breaking News

பிரபலங்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதன் பின்னணி

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனுபவம் வாய்ந்த பிரபலமான அரசியல்வாதிகள் ஏராளமானோர் போட்டியிடுவதிலிருந்து விலகியதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு போலியான காரணங்களைக் கூறினாலும் சில நடைமுறை யதார்த்தங்களை மூடி மறைக்க முடியாது.


மக்கள் செல்வாக்கில் உள்ள வீழ்ச்சிதான் இந்த பின்வாங்களுக்கு பிரதான காரனம் என்பது ஏற்புடையதல்ல. ஏனெனில் விகிதாசார தேர்தல் முறையில் மாவட்டம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பதன் மூலம் வெற்றிபெற முடியும் என்பது கடந்தகால வரலாறாகும்.  


அரசியல் என்பது மக்களுக்கான குரல் மற்றும் சேவை என்று வெளிப்படையாகக் கூறினாலும் பலருக்கு அது ஒரு வியாபாரமாகும். 


ஒரு வேட்பாளர் பாராளுமன்ற தேர்தலில் பத்து கோடி ரூபாய்களை செலவழித்து வெற்றிபெற்றால் ஐந்து வருடங்களுக்குள் இருபது கோடிக்கு மேல் சம்பாதிக்க வேண்டுமென்றுதான் எதிர்பார்ப்பார். இது ஊழல் நிறைந்த ஆட்சியில்தான் சாத்தியமாகும். இன்றைய JVP யின் ஆட்சியில் அவ்வாறு சம்பாதிக்க முடியாதென்று தெரிந்துகொண்டு யாராவது பெரும் தொகையை முதலீடு செய்வார்களா என்று சிந்திக்க வேண்டும்.  


அத்துடன் கடந்தகால ஆட்சியாளர்கள் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்காகவும், எதிர்த்தரப்பு கட்சிகளை பிளவுபடுத்தும் நோக்கிலும், அரசியல் நெருக்கடிகளின்போதும் ஆட்சியாளர்கள் வலை விரித்தபோது அதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சோரம்போனார்கள். 


ஆனால் கொள்கை அடிப்படையில் செயற்படுகின்ற JVP யின் இன்றைய அரசாங்கத்தில் அவ்வாறு சம்பாதிக்க முடியாது. அதாவது கடும் சவால் நிறைந்த இந்த தேர்தலில் கோடிக்கணக்கில் செலவழித்த முதலீட்டுப் பணத்தையாவது மீள பெற்றுக்கொள்வது கடினம் என்று நம்பியிருக்கலாம். 


JVP யின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காண கொளுத்த வரப்பிரசாதங்கள், வாகன பேமிட், இதர சலுகைகள் நிறுத்தப்படுவதுடன் பாதுகாப்பும் அகற்றப்படும் என்ற அறிவிப்புத்தான் பலரையும் கிலிகொள்ளச் செய்துள்ளது. எனவே இவர்களது விலகலுக்கு ஜனாதிபதியின் இந்த அறிவிப்புத்தான் பிரதான காரணமாகும். 


அத்துடன் அதிகாரத்தில் உள்ள JVPயை எதிர்த்து போட்டியிட்டு அவர்களுடன் முட்டி மோதாமல் ஒதுங்குகின்றபோது தங்கள் மீது இருக்கின்ற ஊழல் விவகாரங்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்க முடியுமென்றும் ஒருசிலர் நம்பியிருக்கலாம். 


எனவேதான் கடும் போட்டியும் சவாலும் நிற்றைந்த இந்த தேர்தலில் அச்சம் காரணமாக பலர் போட்டியிடுவதிலிருந்து விலகினாலும், துணிந்து களம் இறங்கிய வேட்பாளர்களை பாராட்டியாக வேண்டும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note