Breaking News

43 வது வருட நிறைவில் புத்தளம் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ.எம்.சனூன்.

 யு.எல்.முஸம்மில்  (குருநாகல் நிருபர்)

புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ.எம்.சனூன் ஊடகத்துறைக்குள் பிரவேசித்து 2024 ம் ஆண்டுடன் 43 வருடங்களை நிறைவு செய்துள்ளார். 


இதுவரை காலமும் தனது ஊடக பணிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக் கொள்கிறார்.


புத்தளம் நகரை பிறப்பிடமாக கொண்ட இவர் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.


1981 ம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் விஞ்ஞான பிரிவில் ஒரு வருடம் மாத்திரம் கல்வி பயின்று விட்டு (பொருளாதார நெருக்கடியின் காரணமாக கல்வியை தொடர முடியாதால்) 17 வயதில் தனது ஊடக பணியை ஆரம்பித்தார்.


முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தினால் அன்று வெளியிடப்பட்ட "உதயம்" பத்திரிகையில் தனது பேனா முனை இளமையிலே மை தடவியது.


இவரது எழுத்துருவுக்கு ஆரம்ப கர்த்தா புத்தளம் அஷ்பா அஷ்ரப் அலி (அஷ்ரபலி காக்கா),  பள்ளிப்பருவ ஆசான்களான கலாபூஷணம் கவிஞர் ஜவாத் மரைக்கார், கலாபூஷணம் கலைஞர் எஸ்.எஸ்.எம்.ரபீக், எழுத்தாளர் கவிஞர் எம்.எஸ்.எம்.அப்பாஸ் ஆகியோர் என்றுகுறிப்பிடும் இவரது ஊடக பணிக்கு வித்திட்டவர் முஸ்லிம் மீடியா போரத்தின் இன்றைய தலைவர் என்.எம்.அமீன் என்கிறார் .


கூடவே இவருக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.இஸட்.அஹமத் முனவ்வர், கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ், முன்னாள் 

தினகரன் ஆசிரியர் பீடம் நிலாம் நானா ஆகியோரும் வழி காட்டியுள்ளனர்.


உதயம் பத்திரிகையின் புத்தளம் நிருபராக 1981 இலிருந்து கடமையாற்றியது மட்டுமல்லாது புத்தளம் நகர வியாபார நிலையங்களுக்கு ஏறி இறங்கி ஒரு பத்திரிகை தலா 03 ரூபாவாவுக்கு விற்றுக் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி இருந்துள்ளார்.

 

இவ்வாறு உதயம் பத்திரிகையில் ஆரம்பமான இவரது ஊடகப்பயணம் பின்னர் 26.02.1990 இல் லேக்ஹவுஸ் தினகரன் பத்திரிகையிலே பயணம் தொடர்ந்தது. தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக அன்று கடமையில் இருந்த திரு. சிவகுருநாதன்  முன்னிலையில் நேர்முக பரீட்சைக்கு தோற்றியதன் பின்னர் "புத்தளம் தினகரன் நிருபர்" எனும் பதவிதனை  பொறுப்பேற்றார்.


அன்றிலிருந்து இன்றுவரை அதே பதவியை தங்கு தடை இன்றி செய்து வர காரணம் பத்திரிகை தர்மத்தை பேணி இவர் கடமையாற்றும் பத்திரிகைக்கும், பத்திரிகை நிறுவனத்துக்கும் நம்பிக்கை நன்றி விசுவாசத்தோடு செயற்படுவதாகும் என்றார்.


1996 ம் ஆண்டு காலப்பகுதியில் அன்று ஊடகத்துறை அமைச்சராக இருந்த தர்மஸ்ரீ சேனாநாயக் அவர்களின் ஏற்பாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஒரு வருட காலம் இலவசமாக நடைபெற்ற ஊடக டிப்ளோமா பாட நெறியில் பங்கேற்று Diploma in journalism (MTI) சான்றிதழையும் இவர் பெற்றுள்ளார்.


புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எஸ்.புல்கி அவர்களோடும், இவருக்கு பிறகு ஊடகத்துக்குள் பிரவேசித்த மர்ஹூம்களான ஆசிரியர் எம்.ஐ.அப்துல் லத்தீப், ஆசிரியர் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஆகியோரோடும் இணைந்து பணியாற்றியுள்ளார்.


ஊடக நண்பர் ஆசிரியர் ஜே.இஸட்.எம்.நமாஸ் நிறைய ஊடக பயிற்சி நெறிகளில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் இவருக்கு பெற்றுக்கொடுத்திருந்தார்.


புத்தளம் நகர சபையின் நகர பிதாவாக கடமையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களின் ஊடக பொறுப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.


அச்சு ஊடகத்துக்குள்ளேயே முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டதால் இலத்திரனியல் ஊடகங்களின் பக்கம் கவனம் செலுத்துவதை தவற விட்டு விட்டதாகவும் இவர் ஆதங்கப்பட்டார்.


இவரது லேக் ஹவுஸ் தினகரனின் பயணம் தற்போது விடிவெள்ளி, தமிழ் மிரர் பத்திகைகளிலும் தொடர்ந்து செல்கிறது.


2020 இல் தோற்றுவிக்கப்பட்ட, 1980 ம் ஆண்டு புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் தனது சாதாரண தர பழைய மாணவர் குழுவினரின் "80ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ்" நண்பர் குழுவினர் இவருக்குள் நீண்ட காலம் ஒழிந்து கிடந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து ஊக்குவித்துள்ளார்கள்.


குறிப்பாக அல்லாஹ் இவருக்கு வழங்கி யுள்ள குரல் வளத்தை கண்டு, ஏதோ ஒரு இலத்திரனியல் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றி இருக்கலாமே என ஆதங்கப்பட்டார்கள்.


தனக்குள் உள்ள திறமைகளை இனங்கண்டு கொள்ளாமல் அச்சு ஊடகத்துக்குள்ளேயே மூழ்கி தனது பயணத்தை இவர் தொடர்ந்துள்ளார்.


இன்றைய இவரது தொழில் ரீதியான செயற்பாடுகளும் ஊடகத்துடனான செயற்பாடாகவே அமைந்துள்ளது. 


இலவச வாட்சாப் ஜனாஸா அறிவித்தல்கள், இலவச சமூகவியல் வாட்சாப் அறிவிப்புகள், கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பர வாட்சாப் அறிவிப்புகள், மேடை அறிவிப்புகள், ஒலிபெருக்கி சாதனங்கள் மூலமான தெரு அறிவிப்புக்கள் (Street Announcement) போன்றன இவரது ஊடக பணியோடு பிண்ணிப்பினைந்துள்ளது.


இன்று சமூக ஊடகங்களின் ஊடகவியலாளர்களோடும், இளம் ஊடக நண்பர்களோடும் முடியுமான வேகத்தில் புத்தளம் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ.எம்.சனூன் தனது ஊடக பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறார்.

அஹதிய்யா பாடசாலையிலும் நீண்ட காலம் பணியாற்றியுள்ள இவர் பல்வேறு சமூக சேவை பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இவரது சமூக சேவைப் பணிகளும்' ஊடகப்பணியும் தொடர வாழ்த்துகிறோம்.









No comments

note