புத்தளம் மாவட்டத்தில் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி. புத்தளம் மாவட்ட செயலாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம்.சனூன்)
எதிர்வரும் 21 ஆம்திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 663,673 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
புத்தளம் மாவட்டத்தில் 14967 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்களை செய்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள 5 தேர்தல் தொகுதிகளிலும் 470 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,வாக்குகளை எண்ணும் பணிகளுக்கென புத்தளம் சென் அன்றூஸ், பாத்திமா மகளிர் கல்லூரி மற்றும் செய்னப் பாடசாலை என்பன தயார்படுத்தப்படுவதாகவும் அவர் இதன் போது கூறினார்.
54 கணக்கெடுப்பு நிலையங்களும் 8 தபால் மூல கணக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்படுவதாகவும், தபால் மூல வாக்குகள் மாலை 7.00 மணிக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அது போன்று ஏனைய வாக்குள் எண்ணும் பணிகள் இரவு 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் இந்த செய்தியாளர் கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டார்.
இதே வேளை பூக்குளம் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் என்பன வில்பத்து வனப்பகுதி ஊடாக கொண்டு செல்ல தேவையான அனுமதியினை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பெற்றுள்ளதாகவும், கல்பிட்டி முகத்துவார வாக்குச் சாவடிக்கு படகுகள் மூலம் அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் அன்றைய தினம் ஏதும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள் என்றும் இவர்களுக்கு உதவியாக பொலீஸ் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments