அக்குறணையில் ஹக்கீமுக்கு “கூ” போட்ட பின்னணியிலுள்ள அரசியல் சதி
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ) - ஓட்டமாவடி.
இலங்கை அரசியலில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும் சிறுபான்மை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் சர்வதேச அரங்கில் இலங்கை முஸ்லிம்களின் அடையாளமாகவும் ரவூப் ஹக்கீம் திகழ்கிறார் என்பது நிதர்சனமானதாகும்.
காலத்தற்கு காலம் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் நாட்டின் நலனைக்கருத்திற்கொண்டு சமூக அக்கறையோடு தீர்மானங்களை மேற்கொண்டார்.
சில தீர்மானங்கள் வெற்றி பெற்றன. சில தீர்மானங்கள் தோல்வியடைந்தன. குறிப்பாக, ஜனாதிபதித்தேர்தலைத் பொறுத்தவரை சில போது ரவூப் ஹக்கீம் ஆதரித்தவர்கள் தோல்வியைத் தழுவிக்கொண்டாலும், வெற்றி பெற்ற நபர்களின் செயற்பாடுகளால் நாடும், நாட்டு மக்களும் வங்குரோத்து நிலையையும் துன்பங்களையும் அனுபவித்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்த வகையில், தற்போது ஒரு ஜனாதிபதித்தேர்தலை நாடு எதிர்நோக்கி இருக்கும் சூழ்நிலையில், நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய சிறந்த ஆட்சியாளரைத்தெரிவு செய்வதற்காக நாட்டு மக்களையும் தன் சமூகத்தையும் அரசியல் ரீதியாக வழி நடத்தும் தலைவர்களில் ஒருவராக ரவூப் ஹக்கீம் தனது பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த அடிப்படையில், நாட்டுக்கு சிறந்த தலைவராக, ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியான ஒருவராக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கப் பிரமதாசாவின் மகன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நாடு பூராகவும் மக்களை விழிப்பூட்டும் பேரணிகளில் கலந்து கொண்டு தனது பேச்சாற்றலூடாக மக்களை விழிப்படையச்செய்யும் காத்திரமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிரணி அரசியல்வாதிகளோடு இணைந்து, ஜனாஸா எரிப்பின் போதும் கோட்டாபாய ஆட்சிக்கு துணை போன சில முஸ்லிம் அரசியல் புல்லுருவிகளும் திட்டமிட்ட அடிப்படையில் ரவூப் ஹக்கீமை விமர்சிப்பதையும் மோசமாக தாக்குவதையும் பிரசார மேடைகளில் காண முடிகிறது.
ஆட்சியாளர்களுக்கு துணை போன முஸ்லிம் அரசியல் புல்லுருவிகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்ற ரவூப் ஹக்கீமை ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் அரசியலிலிருந்து ஓரங்கட்ட எடுக்கின்ற முன்னெடுப்புக்களில் ஒன்றாகவே அக்குரணையில் நடைபெற்ற கூட்டத்தின் போது ரவூப் ஹக்கீமுக்கெதிராக ஒரு சிலர் “கூ” குரலெழுப்பியதைப் பார்க்க முடிகிறது.
இதற்குத்துணையாக அரசியல் ரீதியாக ரவூப் ஹக்கீம் மீது காழ்ப்புணர்வு கொண்ட கட்சிகளும் நபர்களும் சில ஊடகங்களும் உள்ளதைக் காணலாம்.
கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கின்ற குறுநில மன்னர்கள் இச்சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ரவூப் ஹக்கீமுக்கெதிராக சுவரொட்டிகளை கிழக்கில் சில பகுதிகளில் ஒட்டியிருந்ததைக் காண முடிந்தது.
ரவூப் ஹக்கீமுக்கு சொந்த மாவட்ட மக்களே “கூ” குரலிடுகிறார்கள். இதனால் அவர் சொந்த மாவட்டத்திலேயே தனது செல்வாக்கை இழந்து விட்டார். எனவே, அவரை கிழக்கு மக்களும் நிராகரிக்க வேண்டுமென்ற போலிப்பிரசாரங்களை முன்னெடுக்கவே இவ்வாறான ஒரு நிகழ்வு அக்குறணையில் திட்டமிடப்பட்டதா? என்ற சந்தேகம் வலுவாகக் காணப்படுகிறது.
ரவூப் ஹக்கிம் என்பவர் அக்குறணை மக்களுக்கு அல்லது கண்டி மாவட்டத்திற்குச் சொந்தமான பிரதிநிதி அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மையின மக்களின் குரல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது.
கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற வாழ்வில் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்த தலைவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார். மூன்று தசாப்த பாராளுமன்ற வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தான் சார்ந்து சமூகத்துக்காகவும் சிறுபான்மைச் சமூகங்களுக்காகவும் பாராளுமன்றத்தில் மும்மொழிகளிலும் குரல் கொடுத்ததை யாரும் மறுப்பதற்கில்லை. அவைகள் முழுவதும் பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டும் இருக்கிறது.
ஈஸ்டர் தாக்குதல், கொரோனா முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு, பாலஸ்தீன மக்களின் அவலம் போன்ற இவ்வாறான சந்தர்ப்பங்களின் பலர் மௌனமாக இருந்த வேளை உரத்துக்குரல் கொடுத்தவராக ரவூப் ஹக்கீம் காணப்பட்டார்.
அன்று இனவாதத்தீயினால் முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்பட்ட போது கண்டி திகன, அக்குறணை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் நடு இரவிலும் அமைச்சராக இருந்ததனால் தன்னுடைய பாதுகாப்பைக்கொண்டு முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் வலம் வந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. முஸ்லிம் பாதுகாப்பிற்காக தனது அமைச்சை மாத்திரமின்றி, ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுனர்களையும் இணைத்துக் கொண்டு பதவி துறந்த நிகழ்வையும் எளிதில் மறந்து விட முடியுமா?
தன்னிடமுள்ள மொழி ஆற்றலைக்கொண்டு தனது சர்வதேச தொடர்பாடுகளைப் பயன்படுத்தி இராஜதந்திர ரீதியில் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகளை சர்வதேச மயப்படுத்துவதிலும் சர்வதேச ரீதியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் கரிசணையோடு செயற்பட்டதை முஸ்லிம் சமூகம் இலகுவில் மறந்து விட முடியாது.
இவ்வாறு இனவாதிகளுக்கும் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கும் அவர்களுக்கு துணை போகும் முஸ்லிம் அரசியல் புல்லுருவிகளுக்கும் சிம்மசொர்ப்பனமாக ரவூப் ஹக்கீம் திகழ்வதால் அவரை அரசியலிலிருந்து ஓரங்கட்டி விட பல சதிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ரவூப் ஹக்கீமை பொறுத்தளவில் தான் விரும்பிய மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் பிரவேசிக்கும் தகைமையுடையவராக, மக்களின் ஆதரவைப்பெற்ற தலைவராகக் காணப்படுவதால் அவரின் செல்வாக்கை மக்கள் மத்தியிலிருந்து நீக்குவதற்கு போலியான பிரசாரங்களை அடிக்கடி பரப்புவதைக் காணலாம்.
கண்டிய மக்கள் இன, மத வேறுபாடுகளின்றி ஆதரிக்கிறார்கள். அக்குறணை மக்களும் அரசியல் தெளிவில்லாத, தேசிய அரசியலில் என்ன நடக்கிறது? என்ற அறிவைப்பெறாத, ரவூப் ஹக்கீமின் கடந்த கால வகிபாகங்களை அறியாத முட்டாள் மக்களல்ல.
மாறாக, அவர்கள் ஒரு சமூகத்தின் குரலைப் பாதுகாக்கின்ற ஒரு பொறுப்பைச்சுமந்த மக்கள், அவர்களைக்குழப்பி விட சில விசமிகளின் (அரசியல் அதிகாரத்தைப்பெறும் நோக்கில்) செயற்பாடுகள் அண்மைக்காலமாக அக்குறணைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவதைக்காண முடிகின்றது.
அக்குறணை வெள்ளப்பெருக்கு தொடர்பாக ரவூப் ஹக்கீமினால் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பிரதேச அரசியல்வாதிகள், சமூக நிறுவனங்களினால் போதிய ஒத்துழைப்பு வழங்கப்படாமையினால் அது இழுபறியில் சென்று முடிந்திருக்கிறது.
எதிர்வருங்காலங்களில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சி அமைகின்ற போது, அக்குறணை வெள்ளப்பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென நம்புகிறோம். அதனைப்பெற்றுத்தருவதில் ரவூப் ஹக்கீமின் பங்கு அளப்பெரியதாக இருக்கும்.
எனவே, கண்டி வாழ் மக்களே!
அக்குறணை முஸ்லிம் சமூகமே!
விழித்துக் கொள்வோம். ரவூப் ஹக்கீம் எனும் நபரின் வகிபாகம் என்பது இந்த நாட்டிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இன்றியமையாதவொன்றாகக் காணப்படுவதால் அதனை இல்லாதொழிக்கும் முயற்சியில் பேரினவாதிகளும் முஸ்லிம் அரசியல் புல்லுருவிகளும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு போதும் நாம் அதற்கு துணை போய்விடக்கூடாது என்பதில் மிக நிதானமாக, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
இருக்கும் போது ஒருவரின் அருமை புரிவதில்லை. இழந்தபின் புலம்பித்திரிவதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்டு செயற்படுவோம்.
No comments