பெண்ணின் உரிமை சமூகத்தில் பேசுபொருளாகின்றது என்பதால் சட்டம் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பபாளர் அப்துல் அஸீஸ்
பாறுக் ஷிஹான்
எமது சமுதாயத்தில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள். ஆகவே பெண்ணினது உரிமையும் மனித உரிமையே என்பதால் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பங்கு பற்றி நாம் அக்கறை கொள்வதோடு, அவர்களின் முன்னேற்றத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடற்பாடு அனைவருக்கும் உண்டு. எனவே பெண்ணின் உரிமை சமூகத்தில் பேசுபொருளாகின்றது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
முஸ்லிம் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் தமிழ், முஸ்லிம் யுவதிகளுக்கான பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(3)அம்பாறை மாவட்டம் மருதமுனையிலுள்ள முன்னணியின் அலுவலகத்தில் அதன் இணைப்பாளர் யு.எல்.ஹபீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி, பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லாவிதங்களிலும் ஆண்களைப் போலவே அறிவாற்றல்மிக்கவர்களாக, சிறந்த நிருவாகிகளாக, ஆராய்ச்சியாளர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் இன்று தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
இன்றைய பொருளாதார நெருக்கடி காலத்தில் மணமுடித்த கணவன் அநாதரவாய் மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச் சென்றுள்ளதால் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும் நாம் கவனஞ் செலுத்த வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்திலும் பெண்களைப் பற்றிய மனப்பாங்குகள் சட்ட ஏற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைக் காணலாம்.
இச்சட்டத்தின்படி, ஒரு பெண் பருவமடைந்ததும் திருமணம் செய்ய முடியும். ஆனால் 12 வயதுக்குக் குறைவாக இருப்பின் காழி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும். இச்சட்டமானது ஆண்களுக்கான திருமண வயது, இணக்கத்துக்கான தேவை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. பெண்களின் விடயத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றது. இருப்பினும் பொதுச் சட்டத்தின்படி பதினெட்டு வயதினை தாண்டியவர்களே திருமணம் முடிப்பதற்கான சட்ட அங்கீகாரம் உள்ளது.
திருமணத்தின் போதான பிரச்சினைகளுக்கு குடும்ப மட்டத்தில் கலந்துரையாடி சரிசெய்யப்படவேண்டும். அதுவும் கைகூடாத இறுதிநிலையாகவே விவாகரத்து இருக்கின்றது. தற்போதைய காலகட்டத்தில் இளம் யுவதிகள் கையடக்கத் தொலைபேசிகளை தவறாக பயன்படுத்துவதினால் குடும்ப ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குடும்ப வன்முறை தடுத்தல் சட்டத்தின் மூலம் தீர்வுகள் தெளிவாக இருந்துள்ள போதிலும் அதிகமானவர்கள் அச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க விரும்புவதில்லை. திருமண விடயத்திலும், விவாகரத்து விடயத்திலும். பராமரிப்பு விடயத்திலும் பொதுச் சட்டமும், முஸ்லிம் சட்டமும் எத்தகைய விடயப் பரப்புக்களைக் கொண்டுள்ளது என்பதை அனைவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்காக இளம் யுவதிகள் சட்டம் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments