Breaking News

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் அக்கறைப்பற்று கிளையின் தேர்தல் வழிகாட்டல்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது. தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. இவ்வேளையில் வாக்காளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், வழிகாட்டல்களை வழங்கும் தார்மீகக் கடப்பாடு எமக்கு உண்டு என நாம் நம்புகின்றோம். நாட்டைக் கட்டியெழுப்பும் மகத்தான பணிக்கு வாக்குரிமையின் மூலம் பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பமாகவே தேர்தல்களை நோக்க வேண்டும் என்பதை ஆரம்பமாக வாக்காளர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். 


நமது தாய் நாட்டில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வதற்கும் ஜனநாயகப் பெருமானங்களை கட்டியெழுப்புவதற்கும் ஊழல்களற்ற நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வோடு தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் கிடைக்கின்ற வாய்ப்பாகவே நாம் தேர்தல்களை புரிந்துகொள்ள வேண்டும். 

தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஷபாஅத் எனும் சிபாரிசு செய்தலாகும்; வகாலத் எனும் பொறுப்புச் சாட்டலாகும் இவையனைத்துக்கும் மேலாக அது மார்க்கத்தில் ஷஹாதத் எனும் சாட்சி சொல்லலாகும். அது பொய் சாட்சியமாக அமைந்து விடாமல் மெய் சாட்சியமாக அமைய வேண்டும் என்ற வகையில் வாக்காளர்கள் வாக்களிப்பில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்:


•ஏமாற்று, மோசடி, ஊழல், பாவமான முறைகளிலும் முறைகேடான வழிகளிலும் பொருளீட்டல் என்பவற்றிலிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்காக எமது வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.


•நாட்டை நேசிக்கின்ற, மக்களை நேசிக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் திறனும் கொண்டவர்களுக்கு வாக்களிக்கும் பண்பாட்டை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எமது வாக்குகளை அளித்தல். 


•பதவிகளைப் பெறுவதற்கும் வருமானம் ஈட்டுவதற்குமான வழியாக அரசியலைக் கருதாமலும் அதிகார மோசடிகளிக்கு பயன்படுத்தாமலும் அதனை ஓர் உயர் சமூகப் பணியாகக் கருதி செயற்படுபவர்களாக எமது தெரிவுக்குரியவர்கள் அமைதல் வேண்டும்.


•எந்தவொரு பதவியும் அமானிதம் என்ற வகையில் நாம் வழங்கும் வாக்கும் அமானிதம் என்பதையறிந்து வாக்களித்தல்.


•தேர்தல் சட்டங்களை மதித்து தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கும் இடைஞ்சலும் நெருக்கடிகளும் ஏற்படுத்தாது நடந்துகொள்ளல்.


•வாக்களித்தல் ஒவ்வொருவரதும் உரிமை, ஒவ்வொருவருக்கும் தாம் பொருத்தமென கருதுபவருக்கு வாக்களிக்கும் சுதந்திரம் உண்டு. அதேநேரம் எமது சகோதரத்துவம், உறவு என்பவை பாதிக்காத வகையில் வாக்களிப்பில் ஈடுபட வேண்டும்.


•நாட்டுச் சட்டங்களை மீறுகின்ற, வன்முறைகளில்  ஈடுபடுகின்றவர்களாக நாம் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது.


•நாம் இந்நாட்டில் சொல்லாலும் செயலாலும் இஸ்லாத்திற்கு சான்றுபகர வேண்டியவர்கள் என்பதை மனதில் இருத்தி தேர்தலின் போதும் தேர்தலைத் தொடர்ந்தும் நடந்துகொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றோம்.


•வாக்களிப்பு தினத்தில் தூய்மையான உள்ளத்துடனும் அல்லாஹ்விடம் ‘எனது வாக்கின் மூலம் நாட்டிற்கு சிறந்த தலைவன் கிடைக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனையுடனும் வாக்களிப்பில் ஈடுபட ஆலோசனை வழங்குகின்றோம்.


இறுதியாக...

நாமெல்லாம் வாழும் எமது தாய் நாடான இலங்கை மண்ணில் நல்ல ஆட்சி மலர வேண்டும்; எல்லா சமூகங்களும் சமயத்தவர்களும் நல்லிணக்கத்தோடும் ஐக்கியமாகவும் வாழ வேண்டும்; நாடு சகல துறைகளிலும் வளர்ச்சி கண்டு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கு வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக. 


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

புத்தளம் அக்கறைப்பற்று கிளை




No comments

note