புத்தளத்தில் மிக விமரிசையாக இடம்பெற்ற ஹோட்டல் முகாமைத்துவ சர்வதேச கல்வி நிலையத்தின் கௌரவிப்பு நிகழ்வு.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் ஹோட்டல் முகாமைத்துவ சர்வதேச கல்வி நிலையத்தின் (IAHM) முதலாவது வருட கௌரவிப்பு நிகழ்வுகள் புத்தளம் பிரதேச செயலகத்தின் சுபாஷி மண்டபத்தில், சர்வதேச சுற்றுலா தினமான வெள்ளிக்கிழமை (27) காலை மிக விமரிசையாக இடம்பெற்றது.
புத்தளம் ஹோட்டல் முகாமைத்துவ கல்வி நிலையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஜீ.சாஹிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர கலந்து சிறப்பித்தார்.
புத்தளம் கல்வி வலயத்தின் ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், சிலாபம் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவி பணிப்பாளர் மதுர ஏக்கநாயக்க, பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கல்வி நிலையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஜீ.சாஹிக் வரவேற்புரையை நிகழ்த்தியதை தொடர்ந்து அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
இந்த கல்வி நிலையத்தில் அடிப்படை நிலை சர்வதேச சமையல் பாடநெறியை நிறைவு செய்த முதல் தொகுதி 08 மாணவர்களும், இரண்டாம் தொகுதி 15 மாணவர்களுமாக மொத்தம் 23 மாணவர்கள் இதன் போது பிரதம மற்றும் கௌரவ அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி நிலையத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையிலும் உதவியாக இருந்தவர்கள் இதன்போது அதிதிகளினால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புத்தளம் பிரதேசத்தின் மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நன்நோக்கில் "புத்தளம் ஹோட்டல் முகாமைத்துவ சர்வதேச கல்வி நிலையம்" (IAHM) அதன் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஜீ.சாஹிக் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் பிரதேசத்தின் பல்வேறு பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் புத்தளம் ஹோட்டல் முகாமைத்துவ சர்வதேச கல்வி நிலையத்தின் மூலமாக அண்மைக்காலமாக ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பாக பல்வேறு இலவசமான செயலமர்வுகள் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments