ஊழலை ஒழித்து, வறுமையை போக்கும் ஆட்சியை உருவாக்கும் விம்பமாக சஜித் பிரேமதாச பார்க்கப்படுகிறார் : ஹரீஸ் எம்.பி
நூருல் ஹுதா உமர்
இந்த நாட்டில் ஊழலை ஒழிக்கும், வறுமை ஒழிக்கும் ஒரு ஆட்சியை உருவாக்குவதற்காக ஊழலை ஒழிப்பதற்கான விம்பமாக சஜித் பிரேமதாச அவர்கள் பார்க்கப்படுகின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் அவரின் தலைமையில் சனிக்கிழமை (14) இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாசா இருக்கின்ற போது இந்த நாட்டில் வறுமையை ஒழித்து ஜனசவிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். ஜனசவிய திட்டத்தினூடாக கஷ்டப்படுகின்ற குடும்பத்தில் இருந்து ஆசிரியரை உருவாக்குவதற்காக ஜனசவிய ஆசிரியர் சேவையை உருவாக்கினார். இந்த நாட்டில் முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆசிரியர் தொழில் இந்தத் திட்டத்தின் மூலம் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது.
அந்த காலத்தில் அரசு வீடுகள் என்பது எட்டாக்கனியாக இருந்தது. சஜித்துடைய தந்தை ரணசிங்க பிரேமதாச வந்ததுக்கு பிறகு தான் ஒரு லட்சம் வீட்டு திட்டம் வந்தது. கடந்த 15 வருட காலமாக நாங்கள் எல்லோரும் இலவு காத்த கிளிகள் போல இருந்தோம். எப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தாரோ அதற்கு பிறகு அவர்களின் ஆட்சியில் எங்களுக்கு வீடு கட்டி தந்திருக்கின்றார்களா ? இல்லை எங்களுடைய பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பை தந்தார்களா? எங்களின் மீனவர்களுக்கான படகுத்துறையை கட்டினார்களா? எங்களின் நகரத்தை அபிவிருத்தி செய்து தந்தார்களா? ஆனால் அவரும் அவருடைய மகனும் இந்த நாட்டினுடைய பணத்தை எங்கே கொண்டு பதுக்கி வைத்துள்ளவர்கள்?
இலங்கை நாட்டில் வீடு கட்ட வேண்டிய பணத்தை கொள்ளையடித்து சுவிஸ்லாந்திலும், துபாயிலும் பதிக்கி வைத்துவிட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இன்று சஜித் பிரேமதாசா அவர்களுடன் போட்டி போடுகின்ற எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த சாய்ந்தமருது மண்ணுக்கும் கடந்த வாரம் வந்து போனார். பலரும் பேசுவார்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இரண்டு வருடமாக ஆட்சியில் இருக்கின்றார்.
அவர் எமது நாட்டில் வரிசை யுகத்தை இல்லாமல் ஆக்கினார் என்று பலரும் சொல்லலாம். ஆனால் என்ன பிரச்சனை என்றால் மஹிந்த ராஜபக்சவுடன் களவெடுத்தவர்கள் எல்லோரும் இவருடன் தான் இப்போது இருக்கின்றார்கள். உண்மையில் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கான கல்முனை தொகுதிக்கான கூட்டம் சாய்ந்தமருது மண்ணில் மிக விமர்சையாக இடம் பெறுகின்றது. வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக நாங்கள் இந்த கூட்டத்தை பார்க்கின்றோம் - என்றார்
No comments